Published : 11 Sep 2017 01:27 PM
Last Updated : 11 Sep 2017 01:27 PM

ஆதித்தனார் சிலை அமைப்பதில் தாமதம் ஏன்?- அதிகாரிகள் விளக்கம்

எழும்பூர் பாந்தியன் சாலை போலீஸ் கமிஷனர் சாலை சந்திப்பில் நிறுவப்பட்டிருந்த ஆதித்தனர் சிலை அகற்றப்பட்டு நான்கு மாதம் ஆகியும் மீண்டும் நிறுவப்படாத நிலையில் போலீஸ் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.

1987-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில், தமது உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் ஆதித்தனார் சிலையை, திறந்து வைத்தார்.

சென்னை பாந்தியன் சாலை, கமிஷனர் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்ட ஆதித்தனார் சிலை இருக்கும் முக்கிய சாலையான ஹாரிஸ் சாலைக்கு ஆதித்தனார் சாலை எனவும் பெயர் மாற்றம் அறிவித்தார்.

ஆதித்தனார் அனைத்து அரசியல் இயக்கங்களாலும் மதிக்கப்படக்கூடியவர். ஆதித்தனார் சிலை அமைக்கப்பட்ட இடம் முக்கிய சாலைகளின் சந்திப்பு ஆகும். பாந்தியன் சாலை, கமிஷனர் அலுவலக சாலை, மேயர் ருக்மணி லட்சுமிபதி சாலை, ஆதித்தனார் சாலை என பல சாலைகள் சந்திக்கும் முக்கிய இடமாகும்.

பூந்தமல்லி சாலைக்கும், அண்ணா சாலைக்கும் இணைப்பு சாலையாக ஆதித்தனார் சாலை உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது என போக்குவரத்து போலீஸார் காலை, மாலை நெரிசல் மிக்க நேரங்களில் ஒரு வழிப்பாதையாக மாற்றினர்.

அதாவது பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து நேரடியாக ஆதித்தனார் சாலைக்கு வராமல் இடது புறம் திரும்பி எழும்பூர் சென்று பின்னர் லாங்க்ஸ் தோட்ட சாலை வழியாக அண்ணா சாலை போக வேண்டும். பாந்தியன் சாலை, மேயர் ருக்மணி லட்சுமிபதி சாலையிலிருந்து அண்ணா சாலை நோக்கிச் செல்பவர்கள் வலது புறம் திரும்ப முடியாது. இடது புறம் ஆதித்தனார் சிலை அருகே திரும்பி கமிஷனர் அலுவலக சாலை வழியாக எழும்பூர் சென்று சுற்றி வரவேண்டும்.

இதனால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்தது. இதையடுத்து ஆதித்தனார் சிலையை அகற்றிவிட்டு அப்பகுதியில் போக்குவரத்து குறித்த ஆய்வு செய்து மாற்றியமைக்க முடியுமா என்று மாநகராட்சி சார்பில் ஒரு யோசனை வந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவெடுத்து இந்த மாதம் மே மாதம் 29 ஆம் தேதி ஆதித்தனார் சிலையை அகற்றினர்.

பின்னர் போக்குவரத்து குறித்து ஆய்வு நடத்த உள்ளதாகவும் அந்த இடத்தில் புதிய பூங்கா அமைப்பது குறித்தும் ஆய்வு நடத்துவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த நான்கு மாதங்கள் கடந்துவிட்டதில் வேலைகள் ஆமை வேகத்தில் நகர்ந்ததில் எவ்வித மாற்றமும் இல்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாதாரணமாக போக்குவரத்து நெரிசல் குறித்த ஆய்வும், அது சீராக செல்வதற்கான கள ஆய்வும் நடத்தப்பட வேண்டும். இதை முடிப்பதற்கு நான்கு மாதம் சென்றுவிட்டது. வரும் 27-ம் தேதி ஆதித்தனார் பிறந்த நாள் வருகிறது. ஆண்டுதோறும் ஆதித்தனார் பிறந்த நாளுக்கு அவரது சிலைக்கு அனைத்து கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்துவார்கள்.

ஆனால் நான்கு மாதம் ஆகியும் வேலைகள் எதுவும் துவங்கப்படாத நிலையில் ஆதித்தனார் சிலை அமைக்கும் பணி தள்ளிப்போயுள்ளது. இது குறித்து அரசியல் கட்சித்தலைவர்கள் அறிக்கை விட்டுள்ளனர். விரைவில் அதே இடத்தில் சிலையை நிறுவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் பணிகளை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட இடத்தில் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு செய்வதற்காக போக்குவரத்து துணை ஆணையர் மகேஷ்வரி, மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து ஆலோசனை குழு தொண்டு நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

துணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் பக்கத்திலுள்ள கட்டிடத்தின் மீது ஏறி போக்குவரத்து நெரிசலை பார்வையிட்டனர். முதலில் இரு வழிப்பாதையாகவும், பின்னர் ஒரு வழிப்பாதையாகவும் மாற்றி போக்குவரத்து எவ்வாறு செல்கிறது என ஆராய்ந்தனர்.

இது குறித்து போக்குவரத்து துணை ஆணையர் மகேஷ்வரியிடம் பேசிய போது அவர் கூறியதாவது: ''இந்தப் பகுதியில் போக்குவரத்து நிலை குறித்து ஆய்வு செய்தோம். பல கட்டமாக இந்த ஆய்வை மேற்கொண்டோம்.

ஆய்வுப் பணி முடிந்தவுடன் அதன் அறிக்கை அடிப்படையில் ஒரு வழிப்பாதையாக மாற்றுவதா? அல்லது இரு வழிப்பாதையாக மாற்றுவதா என முடிவெடுப்போம். அதன் அடிப்படையில் இங்கு சாலை நடுவே பூங்காக்கள் அமைக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு ஆலோசனை அளித்து வரும் தனியார் ஆய்வு நிறுவன அதிகாரி அத்வைத் ஜானி என்பவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: ''போக்குவரத்து சீராக நடக்கவும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

பாந்தியன் சாலையை பொறுத்தவரை எழும்பூரிலிருந்து வலது புறம் திரும்பும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின் பற்றுவதில்லை. பழைய கமிஷனர் அலுவலகம் அருகே கென்னட் லேன் சந்திப்பில் வாகன ஓட்டிகள் சாலையின் அடுத்தப் பக்கத்திற்கு வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சாலையை இரு வழிப்பாதை ஆக்கினால் போக்குவரத்து நெரிசல் குறைகிறது. அவ்வறு இருவழிப்பாதையாக மாற்றும் போது வாகனங்கள் சிரமமின்றி செல்ல ஆலோசனை வழங்குவதுதான் எங்கள் பணி. இந்த சாலையில் மூன்று இடத்தில் பழையபடி வட்ட பூங்கா அமைக்க உள்ளோம்.

சாலையின் சந்திப்பில் இணைப்புப் பகுதிகளில் சிறிய இணைப்புகளை அமைத்து போக்குவரத்தை சீராக்க முடிவு செய்துள்ளோம். இது பற்றிய அறிக்கை அளித்தவுடன் தரைக்குள் மின் கேபிள்கள், பூங்காக்களுக்கு தண்ணீர் சப்ளைக்காக தண்ணீர் குழாய்கள் பதிக்கும் பணி நடக்கும். நடுவில் உள்ள வட்டப்பூங்காவில் மிகப்பெரிய மின் கோபுர விளக்கும் அமைக்கப்பட உள்ளது.

இது மின் வாரியம், குடிநீர் வழங்கல் வாரியப்பணி. இது முடிந்தவுடன் மாநகராட்சி சார்பில் நாங்கள் சாலை நடுவே வட்டப்பூங்காக்கள் அமைக்கும் பணியை துவக்கி விடுவோம். இது நடந்து முடிய குறைந்தப்பட்சம் 40 லிருந்து 60 நாட்கள் ஆகும்'' என்று தெரிவித்தார்.

வேகமாக பணிகள் நடந்தாலும் ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என்பதால் வரும் 27 ஆம் தேதி ஆதித்தனார் பிறந்த தினம் அன்று சிலை நிறுவப்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x