Published : 28 Jul 2014 00:00 am

Updated : 28 Jul 2014 14:10 pm

 

Published : 28 Jul 2014 12:00 AM
Last Updated : 28 Jul 2014 02:10 PM

தமிழனின் பெருமை மீண்டும் மறைக்கப்படுகிறதா? - ராசேந்திர சோழனை இருட்டடிப்பு செய்த இந்திய கடற்படை

கடல் கடந்தும் படைசெலுத்தி சோழப் பேரரசை அகன்ற சாம்ராஜ்யமாக்கியவன் ராசேந்திர சோழன். அவன் அரியணை ஏற்று ஆயிரம் ஆண்டுகள் நிறைவுக்கு வருவதையொட்டி கங்கை கொண்ட சோழபுரத்தில் விழா எடுத்துள்ளனர் ஊர் மக்கள்.

இந்த விழாவை இந்திய அரசே எடுத்துச் செய்திருக்க வேண்டும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால், சோழ மன்னர்களுக்கு விழா எடுத்தால் அரியணையில் இருப்பவர்களுக்கு ஆகாது என்ற மூடநம்பிக்கையின் தாக்கமோ என்னவோ அரசுகள் இப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை கொண்டாடி ஆவணப்படுத்த தவறிவிட்டன.

கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவர் பொறியாளர் கோமகன், ஆறு மாதங்களாக இந்த விழாவை நடத்த சிரமப்பட்டிருக்கிறார். இந்த விழாவை அரசே நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு ஆம் என்றோ, முடியாது என்றோ தமிழக அரசு தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.

அதன் பிறகுதான் ஊர்மக்களே விழா எடுத்துள்ளனர். பதவிக்கு ஆபத்து வரலாம் என்ற பயமோ என்னவோ சோழ மண்டலத்து அமைச்சர்கள்கூட இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் விழாவை சிறப்பாகவே நடத்தி முடித்துள்ளனர் கங்கைகொண்ட சோழபுரத்து மக்கள்.

இந்த ஆண்டு முழுமைக்கும் திருவாரூர், உடையாளூர், ராசேந்திர சோழன் சமாதி அடைந்த காஞ்சிபுரம் மாவட்டம் பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களிலும் தொடர்ந்து ராசேந்திர சோழன் விழா கொண்டாடப்பட இருக்கிறது. ராசேந்திர சோழன் வரலாறு என்ற குறும்படமும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இனி, ஒவ்வொரு ஆண்டும் இதே தேதியில் ராசேந்திர சோழனுக்கு விழா எடுக்கப் போவதாகக் கூறும் கோமகன், ‘‘அலைகடல் நடுவே படைக் கலன் செலுத்தி போர் புரிந்து மற்ற நாடுகளையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வந்தவன் ராசேந்திர சோழன். அவன் காலத்தில் திறமையான கடற்படை இருந்துள்ளது. இதை நினைவுகூரும் விதமாகத்தான் இந்திய கடற்படையில் ஒரு போர்க் கப்பலுக்கு ‘ராஜேந்திரா’ என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால், சிதிலமடைந்து புதுப்பிக்கப்பட்ட அந்தக் கப்பலுக்கு ‘சாணக்கியா’ என்று பெயரை மாற்றிவிட்டனர். தமிழனின் பெருமை மீண்டும் மறைக்கப்படுகிறது. அந்தக் கப்பலுக்கு மீண்டும் ராசேந்திரன் பெயரைச் சூட்ட வேண்டும். அதற்கான முயற்சியை அனைவரும் முன்னெடுக்க வேண்டும்” என்கிறார்.

தொல்லியல் ஆய்வாளரான குடவாயில் பாலசுப்பிரமணியன் ‘தி இந்து’விடம் பேசுகையில், ‘‘ராசேந்திரனுக்கு அரசு விழா எடுப்பது ஒரு அரசுக்கு இன்னொரு அரசு செய்யும் மரியாதை. எனவே, இந்த விழாவை மத்திய - மாநில அரசுகள் நடத்தி இருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது வருத்தமளிக்கிறது. சோழனுக்கு விழா எடுத்தால் ஆள்பவர்களுக்கு சிக்கல் வரும் என்பதெல்லாம் மூடநம்பிக்கை. மூடநம்பிக்கையில் கவனம் செலுத்திக் கொண்டிருந் தால் எதுவுமே செய்ய முடியாது. இன்னும் காலம் கடந்து விடவில்லை. இந்த ஆண்டின் இறுதிக்குள் ராசேந்திர சோழனுக்கு அரசு விழா எடுக்க அவகாசம் இருக்கிறது’’ என்று கூறினார்.

இதனிடையே, சமூக சேவகரும் கல்வி நிறுவன தலைவருமான மணிரத்தினம் என்பவர், கங்கை கொண்ட சோழபுரத்தில் ராசேந்திரசோழனுக்கு தனது சொந்தப் பணத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டப் போவதாக ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

‘மக்களுக்காக நான் செய்து கொடுத்திருக்கும் இந்தக் கொடைகளை எதிர்காலத்தில் யார் அழியா மல் போற்றிப் பாதுகாக்கிறார்களோ அவர்களின் திருப்பாதத்தை என் தலை மீது வைத்துப் போற்றுவேன்’ இப்படி கல்வெட்டில் செதுக்கி வைத்துவிட்டுப் போயிருக் கிறான் ராசேந்திர சோழன். அந்தப் பேரரசனுக்கு விழா எடுக்க நம்மவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

பிற்காலச் சோழர்கள் 476 ஆண்டுகள் சோழ மண்டலத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். இதில் 273 ஆண்டுகள் சோழப் பேரரசின் தலைநகராக கங்கை கொண்ட சோழபுரம்தான் இருந்திருக்கிறது. தனது புதல்வர் ராசேந்திர சோழனிடம் ராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த ஆண்டு 1012. ஆனால், அதன் பிறகும் இரண்டு ஆண்டுகள் இருவரும் இணைந்தே ஆட்சி செய்துள்ளனர்.

முறைப்படி 1014-ல்தான் ராசேந்திர சோழன் அரியணை ஏற்றார். அதன்படி பார்த்தால் இந்த ஆண்டு ராசேந்திர சோழன் அரியணை ஏற்று ஆயிரமாவது ஆண்டு தொடங்குகிறது. ராசேந்திர சோழன் ஆடி திருவாதிரையில் பிறந்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தனது பிறந்த நாளில் அவர் அரியணையை ஏற்றிருக்க வேண்டும் என்பதை ஒரு கருதுகோளாக கொண்டு ஆடி திருவாதிரை அன்று இந்த விழாவை நடத்தியுள்ளனர்.

கங்கைகொண்ட சோழபுரத் தில் 1982-ல் ராசேந்திரன் பெருவிழா நடத்த எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். விழா ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்திருந்த நிலையில் கடும் புயல் அடித்து அத்தனையையும் கலைத்துவிட்டது. இதனால் அந்த விழா நடக்காமலேயே போய்விட்டது. அரசுத் தரப்பில் விழா எடுக்கத் தயங்குவதற்கு இதுவும் ஒரு சென்டிமென்ட் காரணமாக சொல்லப்படுகிறது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

சர்ச்சைதமிழர் பெருமைராசேந்திர சோழன்இந்திய கடற்படைகங்கை கொண்ட சோழபுரம்வரலாற்று ஆய்வாளர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author