Published : 11 Mar 2023 06:28 PM
Last Updated : 11 Mar 2023 06:28 PM

“துரோகியுடன் பயணம் செய்கிறேன்...” - மதுரை விமான நிலையத்தில் இபிஎஸ் அருகே முழக்கமிட்ட நபரால் பரபரப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இபிஎஸ்

மதுரை: மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பயணித்த பயணி ஒருவர் ‘அண்ணன் எடப்பாடியார்... துரோகியுடன் பயணம் செய்கிறேன்’ என்று முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான பழனிசாமி இன்று (மார்ச் 11) சிவகங்கையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு காலை 10.50 மணிக்கு வருகை தந்தார். அப்போது விமான ஓடுதளத்திலிருந்து, விமான நிலையத்திற்கு பஸ்சில் பயணித்தார். அப்போது அவருடன் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எம்.வையாபுரிபட்டியைச் சேர்ந்த யோகேஸ்வரன் மகன் ராஜேஸ்வரன் (42) என்பவர் சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.

அவரும், முன்னாள் முதல்வர் பழனிசாமியுடன் பயணித்தார். அப்போது, ‘‘எதிர்க்கட்சித் தலைவர், துரோகத்தின் அடையாளம், அண்ணன் எடப்பாடியாருடன் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். அண்ணன் எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம், சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர், 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தென்மாவட்ட மக்களுக்கும் துரோகம் செய்தவர்’ என முழக்கமிட்டார். இதனை ஃபேஸ்புக், டிவிட்டரில் பதிவிட்டார். அதனைக் கண்ட முன்னாள் முதல்வர் பழனிசாமியின் பாதுகாவலர் அவரை தாக்கினார். இந்த தகவலை வரவேற்க காத்திருந்தவர்களுக்கும் தெரிவித்தார்.

பஸ்சிலிருந்து இறங்கி விமான நிலையத்திற்கு வெளியே வந்த முன்னாள் முதல்வர் பழனிசாமியை, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான் ஆகியோர் வரவேற்றனர். அப்போது மற்றொரு பாதுகாவலர் ஒருவர் பஸ்சில் எதிராக முழக்கமிட்டவரின் சட்டையைப் பிடித்து இழுத்து வந்து தாக்கினர். பின்னர் விமான நிலைய வளாகத்திலிலிருந்த தொழிலக பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் முதல்வருக்கு எதிராக முழக்கமிட்ட ராஜேஸ்வரனை அவனியாபுரம் போலீஸில் ஒப்படைத்தனர். அவனியாபுரம் போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் பழனிசாமி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் 12.30மணிக்கு கோயிலை விட்டு வெளியேறியபோது முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோர் செங்கோல் வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x