Published : 01 Sep 2017 09:41 AM
Last Updated : 01 Sep 2017 09:41 AM

ஐஆர்என்எஸ்எஸ் -1எச் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வி: இஸ்ரோ விஞ்ஞானிகள் சோகம்

போக்குவரத்து மற்றும் வழிகாட்டு தொழில்நுட்பங்களை வழங்க உதவும் ஐஆர்என்எஸ்எஸ்-1எச் (IRNSS-1H)செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோவின் முயற்சி நேற்று தோல்வியில் முடிந்தது.

கார்கில் போரின்போது படைகள் இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டறிய அமெரிக்காவின் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியாத நிலை இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்டது. இதனையடுத்து ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துக்கு இணையாக நாவிக் (Navic) தொழில்நுட்பத்தை உருவாக்க இஸ்ரோ முடிவு செய்தது. நாவிக் தொழில்நுட்பத்தை வழங்க 7 செயற்கைக்கோள்களில் முதல் செயற்கைக்கோளான ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ செயற்கைக்கோளை 2013-ல் விண்ணில் செலுத்தியது. இதைத்தொடர்ந்து மேலும் 6 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டு, விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டிருந்த அணுசக்தி கடிகாரம் பழுதானது. பழுதான செயற்கைக்கோளுக்கு மாற்றாக 3 ‘ருபிடியம் அணு கடிகாரங்கள்’ பொருத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1எச் செயற்கைக்கோளை இஸ்ரோ அமைப்பு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்று மாலை செலுத்தியது.

திட்டமிட்டபடி செயற்கைக்கோளை சுமார் 507 கி.மீ தொலைவில் உள்ள சப்-ஜியோ-ஸ்டேஷனரி டிரான்ஸ்பர் ஆர்பிட் (Sub-GTO) சுற்றுவட்டப் பாதையில் 19 நிமிடம் 25 விநாடிகளில் நிலைநிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோளை பிரிக்க முடியாததால் உரிய சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை. இதனால் ஐஆர்என்எஸ்எஸ்-1எச் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த முயற்சி தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்தாண்டு இறுதியில் ஜிஎஸ்எல்வி-எப்08 ராக்கெட் மூலம் ஜிசாட்-6ஏ செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

சோகத்தில் விஞ்ஞானிகள்

ராக்கெட் ஏவப்பட்டு அனைத்து நிலைகளும் வெற்றி பெற்று வந்தது. இதனால் கட்டுப்பாட்டு அறையில் இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் நிம்மதியுடன் இருந்தனர். ஆனால் 19 நிமிடங்களுக்குப் பிறகு, ராக்கெட்டில் இருந்து பிரிந்திருக்க வேண்டிய செயற்கைக்கோள் பிரியவில்லை. இதனால் அனைத்து விஞ்ஞானிகளும் சோகத்தில் மூழ்கினர்.

இஸ்ரோ தலைவர் கிரண் குமார் நிருபர்களிடம் கூறியதாவது: ராக்கெட் ஏவப்பட்டதில் இருந்து அனைத்து நிலைகளும் மிகச் சரியாக நடந்து கொண்டிருந்தன. ஆனால் ராக்கெட் பயணத்தின் 4-வது நிலையில் ராக்கெட்டின் ஷீட் ஷீல்ட் அமைப்பு ராக்கெட்டில் இருந்து பிரியவில்லை. இதன் காரணமாக சரியான சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோளை நிலை நிறுத்த முடியவில்லை. இந்த தோல்வி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கிரண்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x