Published : 11 Sep 2017 05:41 PM
Last Updated : 11 Sep 2017 05:41 PM

ஹெச்.ராஜாவை சாரணர் அமைப்பு தலைவராக்குவதா?- அதிமுக ஆதரவு எம்எல்ஏ.,க்கள் எதிர்ப்பு

பாஜக தலைவர் ஹெச்.ராஜாவை சாரணியர் அமைப்புக்கு தலைவராக்க முயற்சி நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அதிமுக ஆதரவு எம்எல்ஏ,.க்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் வெளியிடும் கூட்டறிக்கை:

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே செயல்பட்டு வரும் சாரண-சாரணியர் அமைப்புக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும், தமிழர் விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருபவருமான ஹெச். ராஜாவை தலைவராக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக கல்வித்துறை அதிகாரிகள் மறைமுகமாக மிரட்டப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கினறன.

தமிழகம் சமூக நல்லிணக்கம், சமூக நீதி ஆகியவற்றின் தாயகமாக திகழ்ந்து வருகிறது.அதுவும் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு மத்தியில் சமத்துவ-சகோதரத்துவ எண்ணங்கள் அதிகமாக மேலோங்கியிருக்கும் மாநிலமாகவும் திகழ்கிறது.

அப்படிப்பட்ட நல்லிணக்க உணர்வுகள் நிறைந்திருக்கும் தமிழகத்தில்,சாரண-சாரணியர் அமைப்புக்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையில் பேசிவரும் ஹெச்.ராஜாவை தலைவராக்க தமிழக அரசு முயற்சி செய்வது அதிர்ச்சியளிக்கிறது.

பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் நாசகார செயலில் ஈடுபடுவது கடும் வேதனையளிக்கிறது. இதை ஏற்கவே முடியாது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற பொறுப்புகளுக்கு சகிப்புத்தன்மையும், பன்முக கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் பரந்த மனமும், தூரநோக்கு பார்வையும் கொண்ட பொதுவான ஒரு நபரையே கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இப்பொறுப்புக்கு ஹெச். ராஜாவை கொண்டு வரும் முயற்சியைக் கைவிட்டு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வழியில் முடிவுகளை மேற்கொள்ளுமாறும் தமிழக அரசையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் மூவரும் கூட்டறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x