Last Updated : 10 Mar, 2023 06:42 PM

 

Published : 10 Mar 2023 06:42 PM
Last Updated : 10 Mar 2023 06:42 PM

என்எல்சி விவகாரம் | கடலூரில் சனிக்கிழமை கடையடைப்புக்கு பாமக அழைப்பு: போலீஸ் குவிப்பு

கடலூர்: என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாமக சார்பில் நாளை (சனிக்கிழமை) மாவட்ட அளவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதற்கு பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்புக் கருதி மாவட்டம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு பாமக எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், மாநில வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட நிர்வாகம், நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஏக்கருக்கு ரு.25 லட்சம் இழப்பீட்டுத் தொகையும், ஒப்பந்தப் பணிக்கான உத்தரவாதம், மாற்று மனை உள்ளிட்ட வசதிகளை அளிப்பதாக உறுதியளித்து, முதற்கட்டமாக இழப்பீட்டுத் தொகையும், சிலருக்கு வேலைவாய்ப்புக்கான பணி ஆணையும் வழங்கிவருகிறது.

இதையடுத்து வளையமாதேவி பகுதியில் நில இழப்பீடுத் தொகை பெற்ற செல்வம் என்பவரின் நிலத்தை கையகப்படுத்துவதாக வியாழக்கிழமை அதிகாலை சென்று நிலங்களை கையகப்படுத்தி, நிலத்தை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டது. இதற்கு பாமக உள்ளிட்ட சில கட்சிகளும், விவசாய அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்ட அளவிலான முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வளையமாதேவி கீழ்பாதி கிராமத்தில் உழவர்களின் நிலத்தை கட்டுப்பாட்டில் எடுத்து சமன்படுத்துவதற்காக என்எல்சி மேற்கொண்ட அத்துமீறல்களும், அதற்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளும் தேவையற்றவை. என்எல்சியும், மாவட்ட நிர்வாகமும் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று அச்சுறுத்துவதற்காகவே மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. அவற்றை கடலூர் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

உழவர்களையும், பொதுமக்களையும் கிள்ளுக்கீரையாக கருதும் என்எல்சிக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பாடம் புகட்டுவதற்காகத் தான் நாளை கடலூர் மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருக்கிறது. இது என்எல்சி நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மட்டும் நடத்தப்படும் போராட்டம் அல்ல. அடுத்து வரும் ஆண்டுகளில் பொதுமக்களின் வீடுகள், நிலங்கள் பறிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் நடத்தப்படும் போராட்டம் தான் இதுவாகும்.

எனவே, நாளைய முழு அடைப்புப் போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அது தான் அப்பாவி உழவர்களின் விளைநிலங்களை அடக்குமுறையை ஏவி பறிக்கும் என்.எல்.சி மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அத்துமீறலுக்கு முடிவு கட்டும். அதற்காக நாளைய முழு அடைப்பு போராட்டத்திற்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவச் செல்வங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கடலூர் மாவட்ட உழவர்களின் நிலங்களை பறிக்கும் என்.எல்.சி நிறுவனத்தையும், அதற்கு துணையாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கடலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு உழவர்கள் மற்றும் வணிகர்களிடமிருந்து கிடைத்து வரும் ஆதரவு மனநிறைவு அளிக்கிறது. அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில் மருத்துவம், பால் உள்ளிட்ட இன்றியமையாத் தேவைகளுக்கும், பிளஸ் 2 வகுப்பு சி.பி.எஸ். பொதுத்தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கும் எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை போராட்டக்குழு உறுதி செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம், உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழர் முன்னணி, தமிழ்நாடு நாயுடு பேரவை, ஐயா வைகுண்டர் மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் சிதம்பரம் நகர வர்த்தக சங்கத்தினர் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவில்லை எனத் தெரிவித்துள்ளனர். ஸ்ரீமுஷ்ணம் வணிகர்சங்கம் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, நிலம் கையகப்படுத்தப்படவுள்ள வளையமாதேவி, ஊ.ஆதனூர், கீழ்பாதி, கரிவெட்டி ஆகிய கிராமத்தினுள் வெளியூர் நபர்கள் உள்ளே செல்லாதவாறு காவல்துறையினர் தடுப்புக் கட்டைகள் அமைத்துள்ளனர். எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை கைதுசெய்து வருகின்றனர். இதனால் மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியே செல்ல முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகிவருகின்றனர்.

பாமகவின் முழு அடைப்பு போராட்டத்தை எதிர்கொள்ளும் விதமாக டிஐஜி பாண்டியன் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராம் கூறுகையில், ''மாவட்டத்தில் வழக்கம்போல பேருந்துகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் இயங்கும். சகஜ நிலையை நீடிக்கும்'' என்றார். மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியனும் ''நாளை கடைகள் வழக்கம்போல் செயல்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x