Published : 10 Mar 2023 06:12 PM
Last Updated : 10 Mar 2023 06:12 PM

நீரை உறிஞ்சும் திறந்தவெளி இடங்கள்... ‘ஸ்பாஞ்ச் சிட்டி’ ஆக மாறும் சென்னை - ககன் தீப் சிங் பேடி விளக்கம்

ஸ்பாஞ்ச்’ பூங்கா

சென்னை: சென்னை மாநகரை 'ஸ்பாஞ்ச் சிட்டி’யாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக குளங்கள் மற்றும் பூங்காக்களை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க பல்வேறு திட்டங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மாநகராட்சிக்கு சொந்தமான திறந்தவெளி காலி இடங்களில் புது முயற்சியாக மழைநீர் சேகரிப்புடன் கூடிய 'ஸ்பாஞ்ச்' பூங்காக்களை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் சார்பில் நடைபெற்ற நகர்ப்புற வெள்ள பாதிப்பு தடுப்பு குறித்த பயிலரங்கத்தில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

அதில் அவர் பேசுகையில், "சென்னையை ‘ஸ்பாஞ்ச்’ சிட்டியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ள பாதிப்புகளை தடுக்க புதிய முறையில் நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி சென்னையை ‘ஸ்பாஞ்ச் சிட்டி’யாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திறந்தவெளி இடங்களை தண்ணீர் உறிஞ்சும் இடங்களாக மாற்றுவதுதான் இந்த ஸ்பாஞ்ச் சிட்டியாகும். முதல் கட்டமாக மாத்தூர் எம்எம்டிஏ மற்றும் திருவெற்றியூர் உள்ளிட்ட இடங்களில் ஸ்பாஞ்ச் குளங்கள் அமைக்கப்படவுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் ஸ்பாஞ்ச் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளது" என்றார்.

"ஸ்பாஞ்ச்" என்றால் என்ன?

  • பஞ்சு போன்று எவ்வளவு தண்ணீரையும் உறிஞ்சும் அமைப்புக்குதான் "ஸ்பாஞ்ச்" என்று பெயர்.
  • இதில் எந்த வித சிமெண்ட் கட்டுமானங்களும் இருக்காது.
  • பூங்கா முழுவதும் மரங்கள் இருக்கும், எல்லாம் பூங்காவிலும் மழை நீர் சேகரிப்பு வசதி இருக்கும்
  • மேலும் தண்ணீரை உறிஞ்சும் வகையில் செயற்கை குட்டைகள் இருக்கும்.
  • இந்த மழை நீர் தேங்காத வண்ணம் உறிஞ்சி நிலத்திற்குள் அல்லது அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு கொண்டு செல்லப்படும்.

சென்னையில் 126 திறந்தவெளி இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு இதுபோன்ற பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது. இவற்றில், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்படும். மழைநீர் வடிகால் இணைப்புடன் கூடிய குட்டை அமைக்கப்படும்.

இந்தக் குட்டையின் அடிப்பகுதி, நீரை பூமிக்குள் உறிஞ்சும் தன்மையில் அமைக்கப்படும். மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கும் பட்சத்தில், மழைநீர் வடிகால் வாயிலாக, குட்டைக்குள் நீர் கொண்டு வரப்படும். குட்டை நிரம்பும் பட்சத்தில், அவை வெளியேற்றும் கால்வாய் வாயிலாக, அருகாமையில் உள்ள குட்டை அல்லது குளம் ஆகிய பகுதிகளுக்கு நீர் கொண்டு செல்லப்படும். இதன்வாயிலாக, குடியிருப்பு பகுதிகளில் நீர் தேக்கத்தை தடுக்க முடியும்.

முதற்கட்டமாக 57 பூங்காக்களில், குட்டையுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 50 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளனது. இதில் சென்னை பெரம்பூரில் உள்ள முரசொலி மாறன் பூங்காவில் ரூ.18 லட்சம் செலவிலும், வி.ஜி.பி செல்வா நகர் 2-வது பிரதான சாலையில் ரூ.12 லட்சம் செலவிலும், கங்கை தெருவில் ரூ.8 லட்சம் செலவிலும் இந்தப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. தற்போது 5 இடங்களில் இந்தப் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 40-க்கு மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற பூங்காக்களை அமைக்க டெண்டர் அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x