

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளிடம் முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
ஐஏஎஸ் பயிற்சி பெற்று வரும் ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், கோவா, கேரளா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 16 ஐஏஸ் அதிகாரிகள் பாரத தரிசனம் திட்டத்தின் கீழ் புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ளனர். இவர்கள் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது, ''புதுச்சேரி மாநிலத்தில் வருமானத்தை ஈட்டித் தருவதில் சுற்றுலாத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. சுற்றுலாவை மேம்படுத்த பல திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் இந்த ஆண்டு உள்நாட்டு உற்பத்தி ரூ.39,019 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. தனிநபர் வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் உள்ளது. மக்கள் நலத்திட்டங்களிலும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் எனது அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது'' என்று முதல்வர் தெரிவித்தார்.
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள், “புதுச்சேரியில் நீண்டகாலம் முதல்வராகப் பதவி வகித்து, தற்போது 15-வது ஆண்டில் தொடர்கிறீர்கள், தங்களுக்கு எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்'' எனக் கூறி கைதட்டி முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர். முதல்வரும் பதிலுக்கு பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து பேசும்போது, ''எளிமையான முதல்வர், மக்கள் முதல்வர் என்கிற பெயரை மக்களிடையே பெற்றுள்ளீர்கள். இந்த புதுச்சேரி பகுதி, யூனியன் பிரதேசமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறீர்களா?'' என்று அதிகாரிகள் கேட்டனர்.
''புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது'' என்று முதல்வர் பதிலளித்தார். இச்சந்திப்பின்போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் உடனிருந்தார்.