Published : 09 Mar 2023 06:12 AM
Last Updated : 09 Mar 2023 06:12 AM

அண்ணா தொழிற்சங்கப் பேரவை சென்னையில் ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கும் முடிவைக் கண்டித்து அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை, பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்கக் கூடாது, ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பணப்பலன் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேரவைச் செயலர் ஆர்.கமலக்கண்ணன் பேசியதாவது: கடந்த ஆண்டு ஜூலை மாதம் பேருந்துகளை தனியார்மயமாக்கும் முயற்சியை அரசு கையில் எடுத்தது. அதை கண்டித்து துறைச் செயலரிடம் கடிதம் வழங்கினோம். அப்போது அமைச்சர் தனியார் மயமாகாது என அறிவித்தார். இப்போது மீண்டும் தனியார் மயமாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இத்திட்டத்துக்கான அரசாணை அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டது என்று அமைச்சர் கூறுகிறார். அதிமுக அரசின் திட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசு, இந்த அரசாணையை மட்டும் ஏன் ரத்து செய்யவில்லை. தற்போது ரூ.50 ஆயிரம் கோடி நஷ்டத்தில் உள்ள துறை, தனியாரிடம் பேருந்துகளை வழங்குவதன் மூலம் மேலும் நஷ்டமடையும்.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவப்படி போன்றவற்றை விரைந்து வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இது போன்ற கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். பேரவைத் தலைவர் தாடி ம.ராசுகூறும்போது, ‘‘ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்ற உத்தரவை மீறி அரசு மேல்முறையீடு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x