Published : 08 Mar 2023 12:00 PM
Last Updated : 08 Mar 2023 12:00 PM

வணிகவரித் துறையினருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: வணிகவரித் துறையினருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வணிகவரித் துறையினருக்கு மாறுதல் வழி மூலமான பணி நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்குவது செல்லும். அதனடிப்படையில் 1981-ம் ஆண்டு முதல் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஐந்தாண்டுகள் ஆகியும் அதை தமிழக அரசு செயல்படுத்தாதது ஏமாற்றமளிக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு தடையாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டு விட்டது. வணிகவரித் துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று பேரவையில் கடந்த ஆண்டே அரசு உறுதியளித்தும் அது நிறைவேற்றப்படவில்லை.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐந்தாண்டுகளாக பாமக குரல் கொடுத்து வருகிறது. வருவாய்த்துறை, பதிவுத்துறை ஆகியவற்றில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், வணிகவரித் துறையினருக்கு மட்டும் தாமதிக்கப்படுவது சமூக அநீதி.

வணிகவரித் துறையினருக்கு கடந்த 23 ஆண்டுகளாக இதே சமூக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இது இனியும் தொடரக்கூடாது. இதில் முதல்வர் தலையிட்டு வணிகவரித் துறையினருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

வணிகவரித் துறையில் 120-க்கும் உதவி ஆணையர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அவற்றையும் உடனடியாக உரிய முறையில் நிரப்பி வணிகவரி வசூல் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x