Published : 02 Sep 2017 11:29 AM
Last Updated : 02 Sep 2017 11:29 AM

மத்திய, மாநில அரசுத்துறை, வங்கி வேலைக்காக வடசென்னையில் பயிற்சி மையம்: முதல்வர் அறிவிப்பு

 

பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில், மத்திய மாநில அரசுத்துறைகள் மற்றும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் அரசின் சார்பில் பயிற்சி மையம் வடசென்னையில் துவக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் வகையில், பல்வேறு முன்னோடித் திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 6 ஆண்டுகளாக செயல்படுத்தி வந்தார்.

அவரின் வழியில் செயல்படும் இந்த அரசால், கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில், மத்திய மாநில அரசுத்துறைகள் மற்றும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் அரசின் சார்பில் பயிற்சி மையம் ஒன்று துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த பயிற்சி மையத்தை பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வட சென்னையில் இந்த ஆண்டு துவக்க தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். இதற்கு அரசுக்கு நடப்பாண்டில் 1 கோடியே 53 லட்சம் ரூபாயும், அதன் பின்னர் ஆண்டுதோறும் 1 கோடியே 25 லட்சம் ரூபாயும் செலவு ஏற்படும்.

இப்பயிற்சி மையத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணாக்கர்கள் Staff Selection Commission, Railway Recruitment Board, Tamil Nadu Public Service Commission, Institute of Banking Personnel Selection போன்ற முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை, திறமையாக எதிர்கொண்டு அவற்றில் தேர்ச்சி பெறும் வகையில், முறையான பயிற்சி அளிக்கப்படும்.

ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும், 500 மாணாக்கர்கள் என்ற வீதத்தில், ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் இம்மாணாக்கர்களின் திறன் மேம்பட்டு வாழ்வாதாரம் சிறக்க வழிவகை ஏற்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x