மாசிமகம் முதல் தனியார் பேருந்து விவகாரம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 6, 2023

மாசிமகம் முதல் தனியார் பேருந்து விவகாரம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 6, 2023
Updated on
3 min read

“மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல” - முதல்வர் ஸ்டாலின்: மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல, அது ஒரு மனிதரின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “உங்களால் இயன்றவரை மக்களின் பிரச்சனையை, தேவையை பூர்த்தி செய்ய நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். நான் முந்தைய ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்ததைப் போல, மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல, அது ஒரு மனிதரின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம். நியாயமாக ஒருவர் கோருவதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை" என்று தெரிவித்தார்.

“கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுக”: கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினாலே என்3என்2 இன்புளுயன்சா வைரஸ் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். செங்கல்பட்டில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "இந்தியா முழுவதும் எச்2என்2 இன்புளுயன்சா வைரஸ் பரவி வருகிறது. இது 4 நாட்கள் வரை காய்ச்சல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஐசிஎம்ஆர் வெளியிட்ட வழிகாட்டுதலின்படி கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினாலே இந்த வைரஸ் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்" என்று தெரிவித்தார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரைப்படி செய்ய வேண்டியவை: கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் | கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் | கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் | இருமல், தும்மல் வரும்போது மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ள வேண்டும் | கைகளால் கண் மற்றும் மூக்கை தொடக் கூடாது.

செய்யக் கூடாதவை: மற்றவர்களுடன் கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும் | பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது | மருத்துவர்கள் அனுமதி இல்லாமல் ஆன்டிபயாடிக் மருத்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

‘வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம்’: "தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்பாக கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 6 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பணி புரிந்து வருகின்றனர். வெளி மாநில தொழிலாளர்கள் அச்சப்படத் தேவையில்லை. தமிழகத்தில் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் பீகார் அரசு குழுவிடம், அம்மாநில தொழிலாளர்கள் கூறி உள்ளனர். அதனை அந்த அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். எனவே, வெளிமாநில தொழிலாளர்கள் அச்சப்படத் தேவையில்லை" என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகள் இயக்கம் குறித்து அமைச்சர் விளக்கம்: போக்குவரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "சென்னையில் தனியா் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்க எந்த முடிவும் செய்யப்படவில்லை. உலக வங்கி அளித்துள்ள கருத்துரை தொடர்பாக ஆய்வு நடத்தவே டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆலோசகர் நியமனம் செய்யபட்டு அறிக்கை பெறப்படும். அறிக்கையை ஆய்வு செய்து, மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் சாதகமான முடிவுதான் எடுக்கப்படும்" என்றார்.

இந்த நிலையில், “மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அதனால் இலவச பயணச் சலுகை ரத்து செய்யப்படாது என்று அமைச்சர் கூறியிருப்பதன் மூலம் சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவிருப்பதை தம்மையும் அறியாமல் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை மீது நாராயணசாமி விமர்சனம்: “வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தவறான செய்தியை பரப்பி தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார். அண்ணாமலை அரைவேக்காட்டு அரசியல்வாதி என்பது உறுதியாகியுள்ளது” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்: மாசிமகத்தை யொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அதிகாலை முதல் மாலை வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

சென்னை - பினாங்கு நேரடி விமான சேவை சாத்தியமா?: சென்னையிலிருந்து மலேசியாவிலுள்ள பினாங்கிற்கு நேரடி விமானப் போக்குவரத்தை தொடங்கிட தேவையான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்திட இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா எழுதியுள்ளார்.

நாகாலாந்தில் எதிர்கட்சி இல்லா ஆட்சி: நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் என்டிபிபி - பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அங்கு எதிர்கட்சிகள் இல்லாத ஆட்சி அமையும் நிலை உருவாகியுள்ளது. முன்னதாக, கடந்த 2015 மற்றும் 2021ம் ஆண்டுகளில் ஆட்சி அமைத்த பிறகு எதிர்கட்சிகள் இல்லாத நிலை உருவானது. ஆனால், இம்முறை ஆட்சி அமைக்கப்படுவதற்கு முன்பாகவே எதிர்கட்சிகள் இல்லாத நிலை உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பில் காயமடைந்த அமிதாப் பச்சன்: இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சனுக்கு படபிடிப்பின்போது காயம் ஏற்பட்டது. இது குறித்து தனது பிளாக் தளத்தில் அவர் தெரிவித்துள்ளார். அதில், “ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஷூட்டில் சண்டைக் காட்சியின் போது நான் காயமடைந்தேன். வலது பக்க விலா எலும்பு உடைந்துள்ளது. தசைப் பகுதியில் சிதைவு ஏற்பட்டுள்ளது. ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் இந்த விவரம் தெரிந்தது. மருத்துவரின் பரிந்துரை படி தற்போது வீடு திரும்பி உள்ளேன். அசையும் போதும், சுவாசிக்கும்போதும் வலிக்கிறது. எப்படியும் இயல்பு நிலைக்கு திரும்ப சில வார காலம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நான் பூரணமாக குணம் அடையும் வரையில் அனைத்து பணிகளையும் தள்ளி வைக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் பெண் மாடல்களுக்கு அந்நாட்டு அரசு விதித்துள்ள குறிப்பிட்ட தடையால் அங்கு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதாவது, மாடலிங்கில் பணி செய்யும் பெண்கள் உள்ளாடை தொடர்பான விளம்பரங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in