மாசி மகம்: கும்பகோணம் மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்

படங்கள்: ஆர். வெங்கடேஷ்
படங்கள்: ஆர். வெங்கடேஷ்
Updated on
1 min read

கும்பகோணம்: மாசிமகத்தை யொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. இதில் அதிகாலை முதல் மாலை வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். கும்பகோணத்தில் 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 பெருமாள் கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவும். ஆண்டுதோறும் மாசிமக விழாவும் நடைபெறும். அதன்படி, நடப்பாண்டு மாசிமக விழாவை யொட்டி கடந்த 25-ம் தேதி 6 சிவன் கோயில்களிலும், 26-ம் தேதி பெருமாள் கோயில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி விநாயகர், முருகன், ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மன் தேரோட்டமும், அதனைத் தொடர்ந்து 5-ம் தேதி மாலை சண்டிகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் ஆகிய 4 தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான மாசிமக தீர்த்தவாரி மகா மககுளத்தில் இன்று நடைபெற்றது. இதையொட்டி இவ்விழாவில் தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவன் கோயிலிருந்து சுவாமி அம்பாள் உள்படப் பஞ்ச மூர்த்தி சுவாமிகள் ரிஷப வாகனத்தில் காலை புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக மகாமக குளத்தின் 4 கரைகளில் எழுந்தருளினர்.

அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் 12.45 மணிக்குள், குளத்தில் அஸ்ரத்தேவருக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட 21 வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகமும் நடைபெற்று, குளத்தில் அஸ்ரத்தேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் 4 கரைகளிலுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் இறங்கி புனித நீராடினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in