

புதுச்சேரி: “வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தவறான செய்தியை பரப்பி தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார். அண்ணாமலை அரைவேக்காட்டு அரசியல்வாதி என்பது உறுதியாகியுள்ளது” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்தார். மேலும், புதுச்சேரியில் காலையில் ரூ.20 லட்சம் லஞ்சம் தந்தால் மாலையில் ரெஸ்டோ பாருக்கு அனுமதி தரப்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது ''தமிழகம், புதுவையில் பாஜக உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகிறது. சமூக வலைதளங்களில் வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க பொய் தகவல்களை பரப்பினர். இது பொய்யானது தற்போது உறுதியாகியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தவறான செய்தியை பரப்பி தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார். இதில் பொறுப்புள்ள கட்சித் தலைவர் பேசியுள்ளது வேதனையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அண்ணாமலை அரைவேக்காடு அரசியல்வாதி என்பது உறுதியாகியுள்ளது.
பாஜக கட்சி பொய் புரட்டை ஏற்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது. பொய்யை மூலதனமாக கொண்டு செயல்படும் பாஜகவின் ஜம்பம் தமிழகம், புதுவை மக்களிடம் பலிக்காது. ஆளுநர் மாளிகையில் மக்கள் குறைகேட்பு கூட்டத்தை நடத்துகின்றனர். ஆனால், இன்னும் ஆளுநர்களும் துணைநிலை ஆளுநர்களும் திருந்தவில்லை. அமைச்சரவை எடுக்கும் முடிவில் ஆளுநர்கள் தலையிடவோ தடைபோடவோ கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட வேண்டியது ஆளுநர் பணி என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. தனது அதிகார உரிமையை முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசையிடம் விட்டுக் கொடுத்து டம்மி முதல்வராக பதவியை காப்பாற்றிக் கொள்கிறார். மக்கள் குறையை ஆளுநர்கள் கேட்பதால் எந்த தீர்வும் கிடைக்காது. ஆளுநர்கள் வரம்பு மீறி செயல்படக் கூடாது. தெலங்கானாவில் ஆளுநராக இருக்கும் தமிழிசை அங்கு மக்கள் குறைகேட்பு கூட்டத்தை நடக்கும் தேதியை தெரிவிக்கக் கோரினேன். அதற்கு பதில் இல்லை.
கலால் துறையில் ரூ.20 லட்சம் காலையில் கொடுத்தால், மாலையில் ரெஸ்டோ பார் நடத்த அனுமதி கிடைக்கிறது. ஏற்கெனவே 400 மதுபார் இருந்த புதுவையில் தற்போது 900 மதுபார் உருவாகியுள்ளது. இந்த ரெஸ்டோ பார்களில் நடன நிகழ்ச்சி நடத்தி கலாச்சாரத்தை சீரழிக்கின்றனர். இதற்கு முதல்வர் வருமானம் வேண்டும் என்கிறார். அரசுக்கு வருமானம் வேண்டுமா? தனிப்பட்ட முறையில் அவருக்கு வருமானம் வேண்டுமா? கலால் துறை லஞ்சத்தில் அமைச்சர்களுக்கும் பங்கு பிரிக்கப்படுகிறது" என்றார்.