Published : 05 Mar 2023 04:21 PM
Last Updated : 05 Mar 2023 04:21 PM

அதிகாரம் கையில் இருந்தபோதே தேர்தல்களில் அதிமுகவிற்கு தோல்வியை தந்தவர் ஓபிஎஸ்: ராஜன் செல்லப்பா

மதுரை: துணை முதலமைச்சராக ஆட்சி, அதிகாரம் கையில் இருந்தபோதே ஆண்டிப்பட்டி, பெரியகுளம் இடைத்தேர்தல்களில் அதிமுகவிற்கு தோல்வியை தேடித்தந்தவர் ஓ. பன்னீர் செல்வம் என்று அதிமுக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த தனக்கன்குளம் பி.ஆர்சி. காலனியில் அதிமுக கொடியேற்று விழா மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேசியதாவது: ”மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி 225 ஏக்கர் நிலத்தை வழங்கினார். மருத்துவமனை கட்டுவதற்கான நிதியை ஜப்பான் நிறுவனமும் வழங்கத் தயாராக இருந்தது. ஆனால், முதல்வர் ஸ்டாலின், அரசியல் போட்டி காரணமாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல், கட்டுமானப்பணி தொடங்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். மதுரையில் கள ஆய்வு மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார். ஆனால், மதுரைக்கான எந்த திட்டங்களும் கொண்டு வரவில்லை. அப்படி என்றால் அவர் எந்த திட்டத்திற்காக கள ஆய்வு செய்ய வருகிறார் என்பது தெரியவில்லை.

திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ரோப் கார் அமைக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டு தற்போது அத்திட்டம் கிடப்பில் உள்ளது. அதேபோல் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம், ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை செயல்படுத்தப்படும் என்று கூறுகிறார்கள். அதற்கான வழிகளை இன்னும் முறைப்படுத்தவில்லை.

திருநகர் பகுதியில் ரூ.3 கோடியில் ஹாக்கி மைதானம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதுவும் கிடப்பில் உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதாக திமுக கூறி வருகிறது. 2013 ஆம் ஆண்டு ஏற்காடு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அதில் திமுக 78 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பதை நினைவு கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல அது கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், மூன்று முறை டெபாசிட்டை திமுக இழந்துள்ளது.

மூன்று முறை முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம், ஜெயலலிதாவிடம் பேசி மதுரை உள்பட தென் மாவட்ட மக்களுக்காக, எந்த திட்டத்தையும் அவர் கொண்டுவரவில்லை. ஆனால் கே.பழனிசாமி முதலமைச்சராக வந்தபோது மதுரை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கி உள்ளார். அதனால்தான் கே.பழனிசாமியை தென் மாவட்ட மக்கள் நம்புகிறார்கள். அவர் மட்டும் இல்லை என்றால் இன்றைக்கு இந்த இயக்கத்தை சிலர் திமுகவிடம் அடகு வைத்திருப்பார்கள்.

2019 ஆம் ஆண்டு பன்னீர்செல்வம் துணை முதல்வராக இருந்த பொழுது ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. அதிமுக தோல்வி அடைந்தது. அது மட்டுமல்லாது 2021 சட்டமன்றத் தேர்தலிலும் பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் அதிமுக தோல்வி அடைந்தது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த பொழுதே அதிமுகவிற்கு தோல்வியை தந்த பன்னீர்செல்வம், கே.பழனிசாமியை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.” இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x