Published : 27 Sep 2017 08:42 AM
Last Updated : 27 Sep 2017 08:42 AM

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியை மீது கொடூர தாக்குதல்: பணி நீக்கத்தால் ஆத்திரம்; கவுரவ விரிவுரையாளர் கைது

மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியரை, அவரது அறையில் நுழைந்து சரமாரியாகக் கத்தியால் குத்திய கவுரவ விரிவுரையாளர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர் ஜெனிபா(40). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தகவல் தொடர்புத் துறை புலத்தின் தலைவராக பணிபுரிகிறார். இவரது கணவர் இசக்கி(43). இவர் மதுரை ரயில்வே கோட்ட அதிகாரியாக உள்ளார். இவர்கள் மதுரை வசந்த நகரில் உள்ள அக்ரினி குடியிருப்பில் வசிக்கின்றனர்.

இந்நிலையில், ஜெனிபா நேற்று காலை பல்கலைக்கழகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பல்கலைக்கழக பகுதி நேர பிஎச்டி ஆய்வு மாணவரான மதுரை குலமங்கலத்தைச் சேர்ந்த ஜோதிமுருகன்(32) என்பவர், ஜெனிபாவின் அறைக்கு சென்றார். கவுரவ விரிவுரையாளர் பணி நியமனம் தொடர்பாக அவருடன் தகராறு செய்துள்ளார்.

அலறல் சத்தம்

சிறிது நேரத்தில் அறையில் இருந்து அலறல் சப்தம் கேட்டுள்ளது. அருகில் இருந்த பேராசிரியர்கள், மாணவர்கள் சென்று பார்த்தனர்.

அங்கு ஜெனிபா கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார். அங்கிருந்து கத்தியுடன் தப்பிய ஜோதிமுருகனை அவர்கள் விரட்டிப் பிடித்தனர்.

ஜெனிபாவை ஆம்புலன்ஸ் மூலம் பல்கலைக்கழக மருத்துவனையில் சேர்த்தனர். கைகள், முதுகு, கழுத்து உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகமலை புதுக்கோட்டை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஜோதிமுருகன் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் பிபி.செல்லத்துரை கூறியதாவது:

கத்தியால் குத்தியதில் அதிக ரத்தம் வெளியேறி உள்ளது. இதை ஈடு செய்ய போதிய ரத்தம் ஏற்றுவதற்கு மாணவர்கள் மூலம் ஏற்பாடு செய்துள்ளோம். உயிருக்கு ஆபத்து இல்லை.

துறை தலைவருக்கு அதிகாரம்

ஜோதிமுருகன் கவுரவ விரிவுரையாளராக கடந்த 3 மாதங்களுக்கு முன் பணிபுரிந்துள்ளார். அவரது நடவடிக்கை சரியில்லாததால் பணியில் இருந்து நீக்கியுள்ளனர். தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க, அந்தந்த துறை தலைவர்களுக்கு அதிகாரம் உள்ளது. 2 நாட்களுக்கு முன்பு நடந்த தற்காலிக விரிவுரையாளர் பணிக்கான தேர்விலும் ஜோதிமுருகனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதை மனதில் வைத்து, அவர் ஜெனிபாவை தாக்கி இருக்கலாம்.

இச்சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக்கழகப் பெண் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும். குறிப்பாக பேராசிரியைகளை பார்க்க, உரிய அடையாள அட்டைகள் காண்பிக்க வேண்டும் என்பது உட்பட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மாணவர், பேராசிரியர்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வர வலியுறுத்தப்படும் என்றார்.

அண்மையில் திருமணம்

சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது: பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் இளநிலை ஆய்வு பட்டம் பெற்ற ஜோதிமுருகன், கவுரவ விரிவுரையாளராகப் பணி புரிந்து கொண்டே, இதே பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாக பிஎச்டி படிக்கிறார். தற்காலிக விரிவுரையாளர் பணி கிடைத்ததைத் தொடர்ந்து அண்மையில் இவர் திருமணம் செய்துள்ளார். விரைவில் நிரந்தர பணி கிடைக்கும் எனப் பெண் வீட்டாரிடம் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இச்சூழலில்தான், உரிய நேரத்துக்கு பணிக்கு வராதது, நடத்தை சரியில்லாதது ஆகிய காரணங்களால் அவரை பணியில் இருந்து சமீபத்தில் துறை தலைவர் நீக்கியுள்ளார். இதனால் ஜோதி முருகன் விரக்தியில் இருந்துள்ளார்.

இதழியல் துறையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடந்த தற்காலிக விரிவுரையாளர் நேர்காணலில் பங்கேற்றபோது, தனக்கு பணி அனுபவம் இருப்பதாகக் கூறி, மீண்டும் வாய்ப்பு கேட்டுள்ளார் ஜோதிமுருகன். பணியில் இருந்து ஏற்கெனவே நீக்கியவரை மீண்டும் சேர்க்க முடியாது என்ற அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேராசிரியை ஜெனிபாவிடம் நேற்று முன்தினம் மாலையில் ஜோதிமுருகன், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், ஜெனிபாவை நேற்று காலை நேரில் சந்தித்துள்ளார்.

அங்கு இருவரிடையே ஏற்பட்ட வாய்த் தகராறில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெனிபாவை சரமாரியாகக் குத்தி உள்ளார். பேராசிரியை ஜெனிபாவின் புகாரின்பேரில் ஜோதிமுருகனை கைது செய்துள்ளோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x