Published : 03 Mar 2023 04:22 AM
Last Updated : 03 Mar 2023 04:22 AM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அபார வெற்றி - முழு விவரம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காங். வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனிடம் வழங்கினார் தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவக்குமார். உடன், மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி உள்ளிட்டோர்.

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார். தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 75 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு கடந்த 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு 74.79 சதவீதம். தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 398 அஞ்சல் வாக்குகளில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 250 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 104 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் ஒரு வாக்கும் பெற்றனர். அதேபோல, சமாஜ்வாதி வேட்பாளர் மற்றும் சுயேச்சைகள் 7 வாக்குகளைப் பெற்றனர். நோட்டாவுக்கு ஒரு வாக்கு கிடைத்தது. 25 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.

தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்றில் தொடங்கி, இறுதிச் சுற்று வரை ஈவிகேஎஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். 15-வது சுற்றின் நிறைவில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் பெற்றார். இதையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவக்குமார், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஈவிகேஎஸ்.இளங்கோவனிடம் வழங்கினார்.

34 ஆண்டுகளுக்கு பிறகு...: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தொகுதியில், 1984-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ்.இளங்கோவன், தமிழக சட்டப்பேரவையில் முதல்முறையாக நுழைந்தார். பின்னர், மத்திய அமைச்சர், காங்கிரஸ் மாநிலத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த ஈவிகேஎஸ்.இளங்கோவன், 34 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஈரோடு கிழக்கு எம்எல்ஏ-வாகத் தேர்வு பெற்று, தமிழக சட்டப்பேரவைக்குச் செல்கிறார்.

கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்ற நிலையில், தற்போது 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று, 66 ஆயிரத்து 233 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அபார வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் நாம் தமிழர், தேமுதிக கட்சிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 11,629 வாக்குகளைப் பெற்றார். இந்த தேர்தலில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், அக்கட்சியின் வாக்கு சதவீதம் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கை நிறைவில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 10,827 வாக்குகள் மட்டுமே பெற்று, மூன்றாமிடம் பெற்றார். அதேபோல, தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்த நிலையில், அக்கட்சிக்கும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் ஒற்றை இலக்கத்தில் வாக்குகளைப் பெற்ற தேமுதிக வேட்பாளர் ஆனந்த், 1,432 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

இந்த தேர்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அபார வெற்றி பெற்ற நிலையில், திமுக, காங்கிரஸ் கட்சியினர், ஈரோட்டில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x