Published : 03 Mar 2023 03:35 AM
Last Updated : 03 Mar 2023 03:35 AM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு உணர்த்துவதென்ன?!

சேலம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு சுயபரிசோதனை செய்து கொள்ள முன்வராத அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் முடிவின் மூலம் அனைத்து கட்சிகளுக்குமே வாக்காளர்கள் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர் என்பதாக கணிக்க முடிகிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா-வின் திடீர் மரணத்தால், அங்கு இடைத்தேர்தல் களம் உருவானது. அடுத்த ஆண்டு மக்களவைப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வதற்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் நல்லதொரு வாய்ப்பாக கிடைத்தது. ஆனால், ஆட்சியில் உள்ள திமுக உள்பட அனைத்து கட்சிகளுமே தங்களின் சொந்த செல்வாக்கின் மீது நம்பிக்கை வைக்காமலே, இடைத்தேர்தலை சந்தித்ததை காண முடிந்தது.

கூட்டணி தர்மத்தின் அடிப்படையில், ஈரோடு கிழக்குத் தொகுதியை காங்கிரஸூக்கே விட்டுக்கொடுத்த, திமுக, ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றிபெற வைக்க, நேரடியாகவே களத்தில் குதித்தது. முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுகவினர் பலர் மக்களிடம் நேரடியாக வாக்கு சேகரித்தனர். திமுக அமைச்சர்கள், அலுவலகப் பணிக்கே செல்லாமல், தொகுதியிலேயே முகாமிட்டிருப்பதாக, அதிமுக-வினர் குற்றம் சாட்டினர்.

காங்கிரஸ் தோல்வியுற்றால், அது எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பாக, அதிமுக மற்றும் பாஜகவினருக்கு சாதகமாகிவிடும் என்பதாலும், திமுகவின் 2 ஆண்டு கால ஆட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்றே பேசப்படும் என்று கருதியும், திமுக நேரடியாக தேர்தல் களத்தில் இறங்கியது என்றே பலரும் கூறினர்.

இதேபோல், அதிமுகவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனியாகப் போட்டியிட்டு, தங்கள் சொந்த செல்வாக்கை நிரூபிக்க வாய்ப்பு இடைத்தேர்தலில் வாய்ப்பு கிடைத்தது. கடந்த காலத்தில், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, ஜா- ஜெ என இரு அணிகள் பொதுத்தேர்தலில் போட்டியிட்டன. அதில் ஜெயலலிதா, சுயேச்சையாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டு, 27 தொகுதிகளில் வெற்றி பெற்று, அதிமுகவை கைப்பற்றினார்.

அதுபோன்று, ஈரோடு இடைத்தேர்தலில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியே போட்டியிடுவர் என்றே அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களும் இரட்டை இலை சின்னமின்றி வாக்காளர்களை சந்திக்கத் தயக்கம் காட்டினர். பாஜக போட்டியிட்டால், தங்களின் ஆதரவை வழங்குவோம் என்று ஓபிஎஸ் அறிவித்தார். மறுபுறம், உச்ச நீதிமன்றம் வரை சென்று, இரட்டை இலை சின்னத்தைப் பெற்று, தனது வேட்பாளரை களமிறக்கினார் இபிஎஸ்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக, திமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் உள்பட பல கட்சிகள் அணி வகுத்து நின்றன. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக, பாஜக, ஓபிஎஸ் அணி, தமாகா, ஐஜேகே உள்பட பல கட்சிகள் வரிசை கட்டின. விதிவிலக்காக, வேறு வழியின்றியும், கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றிருந்த நம்பிக்கையும் தேமுதிக தனித்துக் களமிறங்கியது.

2026-ல் ஆட்சி அமைப்போம் என்று கூறிவரும் பாமக இடைத்தேர்தல் களத்தில் இறங்காமல் ஒதுங்கிக் கொண்டது. மக்கள் நீதி மய்யம், காங்கிரஸூக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தது. நாம் தமிழர் கட்சி, எப்போதும் போல, தனித்து களமிறங்கியது. பாஜகவோ தேர்தலில் போட்டியிடுவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டு, பின்னர் அதிமுகவின் பின்னால் அமைதியாக பதுங்கிக் கொண்டது.

இப்படி, அரசியல் கட்சிகள் தங்கள் முகங்களை மறைத்துக் கொண்டு, மாற்றிக் கொண்டு, கூட்டணி, பண பலம் ஆகியவற்றை நம்பி இடைத்தேர்தலை சந்திந்தன. தொகுதி வாக்காளர்களுக்கு, ஒவ்வொரு நாளும் பணம், ஸ்மார்ட் வாட்ச், வெள்ளிக்கொலுசு என பரிசு மழை பொழிந்த தகவல் செய்திகள் வெளியாகி, தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது, தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. கிடைத்துள்ள முடிவுகள் மூலம் வாக்காளர்களின் (தமிழக மக்களின்) மனநிலையை புரிந்துகொள்ள முடியாத நிலைக்கு, அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டுவிட்ட என்பதே நிதர்சனம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு, மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா அல்லது எதிர்பாராத மாற்றத்தை கொடுத்துவிடுமா என்ற அச்சத்தை அரசியல் கட்சிகளிடையே ஏற்படுத்தியுள்ளதாக உணர முடிகிறது.

குறிப்பாக, காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு காரணம், வாக்காளர்களின் ஆதரவு மட்டும் காரணமா, கூடவே பணமும், கூட்டணி பலமும் காரணமா? என்பதை சிந்திக்க வேண்டியதாகிறது. மக்கள், ஆளும் திமுகவுக்கு ஆதரவான மனநிலை அல்லது எதிரான மனநிலையில் உள்ளனரா என்பதை அவர்களே அறிய முடியாமல் போய்விட்டது.

இரட்டை இலை சின்னத்துடன் போட்டியிட்டும், மிகமிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, அதிமுகவினரிடம் உள்ள ஒற்றுமையையும், பாஜக உடன் தொடரும் கூட்டணியால் செல்வாக்கு குறைந்துவிட்டதா என்ற பல கேள்விகளை கேக்கிறது.

இவர்கள் இப்படி என்றால், நாம் தமிழர் கட்சி, நடுநிலை வாக்காளர்களின் நம்பிக்கையை பெற முடியாத நிலையில் தான் உள்ளதா என்றும் கேட்க தோணுகிறது. ஒட்டுமொத்தத்தில், இனி தேர்தலில் வெற்றி பெற பணம் மட்டும் தான் தேவையா? கூட்டணி பலம் வேண்டுமா? கூட்டணியை மறு பரிசீலனை செய்ய வேண்டுமா? என்பதுரீதியான குழப்பத்தை அரசியல் கட்சிகளிடையே விதைத்துள்ள தேர்தல் முடிவாக இது அமைந்துள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x