Published : 02 Mar 2023 06:56 PM
Last Updated : 02 Mar 2023 06:56 PM

மதச்சார்பற்ற கூட்டணிக்கு கமல்ஹாசன் வருவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை

கோப்புப்படம்

ஈரோடு: "சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, வேறுபாடுகள் கலாச்சாரங்களை எல்லாம் மறந்து அனைவரும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்ற உள்ளத்தோடு இருக்கின்ற மதச்சார்பற்ற ஒரு மனிதர் கமல். எனவே, அவர் இந்த மதச்சார்பற்ற கூட்டணிக்கு வருவார் என்று நம்புகிறேன். அவர் வரவேண்டும் என விரும்புகிறேன்" என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,08,869 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,443 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 8,474 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,177 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர், ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "திமுக தலைமையில் இருக்கின்ற மதச்சார்பற்ற கூட்டணி, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெல்லும் என்பதற்கு முன்னோட்டம்தான் இந்த வெற்றி. ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகை நன்றாகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரையில், நான் எதிர்பாராமல் இந்த எம்எல்ஏ பதவி வந்தது. நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு ஆதரவளித்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் குறைகளை சரி செய்ய வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய பணியாக இருக்கும். இனிமேலும், பதவிகளைப் பெறுவது எனக்கு தேவையற்ற விசயம். என்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களுக்கு நான் ஒன்றும் சொல்ல வேண்டியது இல்லை. நான் சொல்லி அவர்கள் கேட்கக்கூடிய மனநிலையிலும் அவர்கள் இல்லை.

அதிமுகவைப் பொறுத்தவரையில் பாஜகவுக்கு கொத்தடிமையாக இருக்கின்ற காரணத்தினால்தான், அவர்களுக்கு இவ்வளவு பெரிய தோல்வி ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை, இரட்டை புறா என எந்த சின்னம் கிடைத்திருந்தாலும் தோல்வி பெறுவோம் என்பது அவர்களுக்கும் தெரியும். எனவே, இரட்டை இலை கிடைத்ததால் வெற்றி பெற்றுவிட முடியும் என்பது போன்ற கனவு காணும் விசயம் வேறதுவும் இல்லை.

ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் எனக்கு மகத்தான வெற்றியைத் தந்துள்ளனர். அதற்கு காரணம் முதல்வர் ஸ்டாலினின் அயராத உழைப்பு. மநீம தலைவர் கமல்ஹாசனின் பரப்புரை மிக பயனுள்ள பரப்புரையாக இருந்தது. அவர் பிரச்சாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் மிகப் பெரிய வரவேற்பைத் தந்தனர். எனவே, அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கமலைப் பொறுத்தவரை நான் அவரை ஒரு நடிகராக பார்க்கவில்லை. பன்முகத்தன்மைக் கொண்ட ஒரு மனிதராக பார்க்கிறேன். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, வேறுபாடுகள் கலாச்சாரங்களை எல்லாம் மறந்து அனைவரும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்ற உள்ளத்தோடு இருக்கின்ற மதச்சார்பற்ற ஒரு மனிதர். எனவே, அவர் இந்த மதச்சார்பற்ற கூட்டணிக்கு வருவார் என்று நம்புகிறேன். அவர் வரவேண்டும் என விரும்புகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x