Published : 01 Mar 2023 04:17 AM
Last Updated : 01 Mar 2023 04:17 AM

ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனை கட்டிடங்களுக்கு அடிக்கல் உட்பட ஏற்றமிகு 7 திட்டங்கள் தொடக்கம்

ஏற்றமிகு 7 திட்டங்களின் கீழ், சென்னையில் தூய்மை பணியாளரை தொழில்முனைவோராக ஒருங்கிணைக்கும் சிறப்பு திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் - தலித் இந்திய வர்த்தக, தொழிற்சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ்தாஸ் மீனா, தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலர் இரா.செல்வராஜ்.படம்: பு.க.பிரவீன்

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனை கட்டிடங்களுக்கு அடிக்கல் உட்பட ஏற்றமிகு 7 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, ஏற்றமிகு 7 திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது, முதல்வர் பேசியதாவது: திமுக ஆட்சி அமையும் முன்பே நான் கூறியபடி, பொருளாதாரம், வேளாண்மை, குடிநீர், கல்வி, நகர்ப்புற வளர்ச்சி, சமூக பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி ஆகிய 7 இலக்குகளை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடர்கிறோம்.

ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான புதியமுதலீடுகளை ஈர்த்துள்ளோம். ரூ.2,563 கோடியில் ஊரக குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். ரூ.18,815 கோடி மதிப்பில் 446 குடிநீர் திட்டப் பணிகள், ரூ.4,499 கோடியில் 23 பாதாள சாக்கடை திட்டங்களுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.49,385 கோடியில் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக 7 திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. மனிதர்களேமனிதக் கழிவுகளை அகற்றும் நிலைக்குமுற்றுப்புள்ளி வைக்க தலித் இந்தியவர்த்தக தொழிற்சங்கத்துடன் இன்றுஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாதாள சாக்கடை திட்ட பராமரிப்பு,கழிவுநீர் அகற்றும் பணியை நவீன இயந்திரங்கள் மூலமாக மேற்கொண்டு, உயிரிழப்புகளை முற்றிலும் தவிர்க்க திட்டமிட்டுள்ளோம்.

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தொழில் முனைவோராக ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான முன்னோடி திட்டம் சென்னை பெருநகர பகுதியில் செயல்படுத்தப்படும். தூய்மைத் தொழிலாளர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்காக, தலித் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்புடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் தூய்மைப் பணியாளர் குடும்பத்தினருக்கு, நவீன கருவிகள், வாகனங்கள் வழங்கப்படுவதோடு, திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படும். முதலில் சென்னையிலும், தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

அடுத்தது, சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் அருமையான திட்டம். 3-வதாக, மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவசவீட்டுமனை பட்டா வழங்க உள்ளோம்.

அடுத்து, திருநங்கைகளுக்கு மாதஉதவித் தொகை ரூ.1,000-ல் இருந்துரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. 5-வதாக பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்களில் இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது.

காலை உணவுத் திட்டம்: அடுத்தது, முதல்வரின் காலை உணவுத் திட்டம். இதன் அடுத்த கட்டமாக, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 36 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 433 பள்ளிகளுக்கு நாளை முதல்விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்மூலம் 56,098 மாணவர்கள் கூடுதலாக பயனடைவார்கள். 7-வது திட்டமாக,ரூ.1,136.32 கோடியில் 44 இடங்களில் புதிய மருத்துவமனை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

வளமான, வலிமையான, வறுமை ஒழிந்த, சமத்துவ, சுயமரியாதை தமிழகமே எனது லட்சியம். ‘எனது ஏற்றம் மிகுதமிழகமே’ என்று ஒவ்வொருவரும் பெருமையுடன் அழைக்கும் நிலையை உருவாக்க அனைவரும் உழைப்போம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மு.பெ.சாமிநாதன், கீதாஜீவன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில்மகேஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, நகராட்சி நிர்வாக செயலர் சிவ்தாஸ்மீனா, செய்தித் துறை செயலர் செல்வராஜ், செய்தித் துறை இயக்குநர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள், ‘‘ஹேப்பி பர்த்டே டூ யூ’’ என்று பாடி, பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க, முதல்வரும் அவர்களை வணங்கி வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x