

விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் அருகே கப்பியாம் புலியூர் ஏரி வாய்க்கால் அருகே கடந்த சனிக்கிழமை இரவு பள்ளி மாணவனை தாக்கி பள்ளி மாணவியை 3 கயவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இருவரும் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை செயல்.
இதனை மாவட்ட எஸ்.பி கூட்டு பாலியல் வன்கொடுமை இல்லை என்பதைப் போல் அறிக்கை விடுகிறார். மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அதனால் கொலை, கொள்ளை, திருட்டு உட்பட இது போன்ற பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
மாவட்ட நிர்வாகம், காவல்துறை உடனடியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டவர்களை மாவட்ட காவல் துறை விரைந்து கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.