Last Updated : 28 Feb, 2023 04:43 PM

2  

Published : 28 Feb 2023 04:43 PM
Last Updated : 28 Feb 2023 04:43 PM

மதச்சார்பற்ற கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் தேர்வில் பிரச்சினை இல்லை: டி.ராஜா கருத்து

புதுச்சேரி: “வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படுவதே முக்கியம். ஆகவே, மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் ஒருங்கிணைவது அவசியம். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகே பிரதமர் யார் என்பதை முடிவு செய்யலாம்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலர் டி.ராஜா தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு, நிர்வாகக்குழு கூட்டங்கள் கடந்த 25-ல் தொடங்கி நடந்தது. இன்று தேசியக்குழுக் கூட்டம் நடந்து முடிந்தது. அதன்பிறகு அக்கட்சியின் தேசிய பொதுச்செயலர் டி. ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: பணப் பரிமாற்றம் இடைத்தேர்தலில் மட்டுமல்ல, தேர்தல்களிலும் பண ஆதிக்கம் செலுத்துகிறது. இது இடைத்தேர்தலில் மட்டுமல்ல, பொதுத்தேர்தலிலும் பிரச்சினையாகிறது.

நேர்மையான தேர்தல் நடக்க இந்திய ஜனநாயகத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம். விகிதாச்சார பிரதிநிதித்துவம் தேவை. கார்ப்பரேட் நிறுவனங்களில் பணம் பெற்று ஆதாயம் பெற்றுள்ளது உச்சத்திலுள்ள கட்சி பாஜகதான். அதற்கு அடுத்த இடத்தில் மற்ற கட்சிகள் மிகவும் அடிமட்ட நிலையிலுள்ளன.

வரும் மக்களவைத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். எங்கள் கட்சிகள் போட்டியிடும் இடங்களை ஆராய்ந்துள்ளோம். மதசார்பற்ற ஜனநாயக அணியை ஒருங்கிணைக்க முயற்சிகள் நடக்கிறது. தலைவர்களை சந்தித்து வருகிறோம். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படுவதே முக்கியம். ஆகவே, மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் ஒருங்கிணைவது அவசியம். ஒன்றுபட்ட கூட்டணியால்தான் பாஜகவை தோற்கடிக்க முடியும். அதற்காக அனைத்து ஜனநாயகச் சக்திகளையும் அழைக்கிறோம். எதிர்க்கட்சிகள் மாறுபட்டு நிற்பது நாட்டு நலனுக்கு நல்லதல்ல.

மதச்சார்பற்ற கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் தேர்வில் பிரச்சினை இல்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகே பிரதமர் யார் என்பதை முடிவு செய்யலாம். ஏற்கெனவே அதுபோல பிரதமர் தேர்வு நடந்துள்ளது. அனைவரும் கூட்டாக பிரதமரை தேர்தலுக்கு பிறகு தேர்வு செய்யலாம். திரிணாமூல் கட்சித் தலைவர் தன்னை முன்னிலைப்படுத்துவது அவரது தனிக் கருத்து'' என்று டி.ராஜா குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x