Published : 12 Sep 2017 01:37 PM
Last Updated : 12 Sep 2017 01:37 PM

முதல்வர் ஈபிஎஸ் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக மனு

முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

''கடந்த 10-ம் தேதி அன்று என் தலைமையில் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து மெஜாரிட்டியை இழந்துவிட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி, தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால், ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். ஆளுநர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காகவே நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.

தமிழக சட்டப்பேரவையைக் கூட்டும் அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது. பேரவையைக் கூட்டினால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும். பெரும்பான்மை இருந்தால் முதல்வர் பழனிசாமி நிரூபிக்கட்டும். பெரும்பான்மையை நிரூபித்த பிறகு எடப்பாடி பழனிசாமி என்னை விமர்சிக்கட்டும்.

அதிமுக பொதுக்குழு தீர்மானத்தில் தலையிட விரும்பவில்லை. டிடிவி தினகரனுக்கு எந்த ஒரு விளம்பரமும் தேடித் தர நான் விரும்பவில்லை'' என்று ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x