Published : 28 Feb 2023 04:05 AM
Last Updated : 28 Feb 2023 04:05 AM

பொருளாதார நெருக்கடியால் செலவை தவிர்க்கும் இலங்கை - கச்சத்தீவு திருவிழாவுக்கு இந்தியா உணவு வழங்க எதிர்பார்ப்பு

ராமேசுவரம்: கடும் பொருளாதார நெருக்கடியில் தவிப்பதால் கச்சத்தீவு திருவிழாவுக்கான உணவு செலவை பெருமளவு இலங்கை குறைத்துள்ளது. இதனால் பக்தர்களுக்கான உணவு ஏற்பாட்டை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இலங்கையில் கடந்த ஓராண்டு காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்தன. இதனால், அரசுக்கு எதிராக மக்கள் கிளர்த்தெழுந்து நடத்திய போராட்டத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அதிபர் கோத்தபய ராஜபக்ச அடுத்தடுத்து பதவி விலகினர்.

புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவும், பிரதமராக தினேஷ் குணவர்தனவும் பதவி வகித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் தமிழர்கள் 224 பேர் கடந்த 2022 ஆண்டு மார்ச் முதல் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர். இந்நிலையில், கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் திருவிழா வரும் மார்ச் 3-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடர்ந்து சிலுவைப்பாதை நிகழ்ச்சியும், மார்ச் 4-ம் தேதி இரவு தேர்ப் பவனியும் நடைபெறுகிறது. கூட்டுத் திருப்பலிக்குப் பின் கொடியிறக்கத்துடன் கச்சத்தீவு திருவிழா நிறைவடைகிறது. இந்த ஆண்டு திருவிழாவில் இந்திய பக்தர்கள் சுமார் 2,400 பேர் கலந்து கொள்வதற்காக ராமேசுவரத்திலிருந்து 60 விசைப்படகுகளும், 12 நாட்டுப் படகுகளும் பயன்படுத்தப்பட உள்ளன.

ஆண்டுதோறும் கச்சத்தீவு திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து செல்லும் பக்தர்களுக்கு இரண்டு நாட்களும் இலங்கை கடற்படையால் உணவுஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்காக அந்நாட்டு அரசால் வழங்கப்பட்டுள்ள நிதி 2 நாட்கள் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு உணவு வழங்கப் போதுமானதாக இல்லை.

இதனால், இந்த ஆண்டு திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இலங்கை கடற்படையால் இரண்டு நாட்கள் உணவு வழங்கஇயலாது என்றும் 2-ம் நாள் விழாவில் காலை மட்டும் சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவின் முதல் நாளானமார்ச் 3-ம் தேதிக்குரிய உணவை பக்தர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

மேலும் முன்பு போல கச்சத்தீவிலேயே பக்தர்கள் சமைத்துச் சாப்பிடுவதற்கும் தடை நீடிக்கிறது. இதனால், திருவிழாவுக்குச் செல்லும் பக்தர்களுக்கு உணவு கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. கச்சத்தீவு திருவிழாவுக்கு அழைத்துச் செல்லும் நாட்டுப் படகு பயண ஏற்பாட்டாளர் எஸ்பி.ராயப்பன் கூறுகையில், `உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் பக்தர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

அதேநேரத்தில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் இந்திய, இலங்கை பக்தர்களுக்கு திருவிழா நடைபெறும் இரண்டு நாட்களும் உணவு வசதியைச் செய்துதர வேண்டும்' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x