Last Updated : 26 Feb, 2023 06:28 PM

1  

Published : 26 Feb 2023 06:28 PM
Last Updated : 26 Feb 2023 06:28 PM

தமிழைத் தேடி பயணம் | பாமக நிறுவனர் ராமதாசுக்கு விசிக எம்.பி ரவிக்குமார் வாழ்த்து

புதுச்சேரி: பாமக நிறுவனர் ராமதாஸ் மேற்கொண்டிருக்கும் தமிழைத் தேடி பயணம் நிறைவேற வாழ்த்துகிறேன் என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் க. பஞ்சாங்கத்தின் எழுத்துலக ஆய்வரங்கு புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது. இதில் விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது: ''தமிழகத்தில் கடந்த நூறாண்டுகளாக தமிழ்த்துறைப் பேராசிரியர்களே தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய சிந்தனையில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தமிழ் சார்ந்த கருத்துகளை மட்டுமின்றி, தத்துவ - பொருளாதாரக் கருத்துகளையும், தொல்லியல் சார்ந்த கருத்துகளையும் தமிழ்ச் சமூகத்திற்கு காலத்துக்கு ஏற்ப அறிமுகம் செய்து வருகின்றனர்.

தமிழ் பேராசிரியர்களைப் போல மற்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் தமிழ்ச் சமூகம் குறித்து கருத்துகளை அறிமுகம் செய்வதில்லை. தமிழாசிரியர்களிடையே மொழிப்பற்றும், சமூக பொறுப்புணர்வும் பிரிக்கமுடியாதவாறு உள்ளது.'' இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிகையில், ''புதுச்சேரியில் உள்ள மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் பல ஆய்வாளர்களை உருவாக்க காரணமாக இருந்தது. இதில் பெரிய பல பேராசிரியர்கள் பணியாற்றினார்கள். தற்போது அது மூடப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி தமிழ் பற்று கொண்டவர். தமிழுக்காக போராட்டக்களத்தில் இருந்தவர்.

அவரது ஆட்சிக் காலத்தில் தமிழுக்காக இருந்த நிறுவனம் மூடப்பட்டது என்ற அவபெயர் ஏற்படக்கூடாது. எனவே புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி மீண்டும் புதுப்பிக்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை தனது பெயரிலேயே வைத்திருக்கும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஆளுநர் தமிழிசை தமிழ் பற்று கொண்டவர். அவரது தந்தையும் தமிழ் மீது பெரும் பற்று கொண்டவர்.

அவரது காலத்தில் இந்த நிறுவனம் மூடப்பட்டால் அவருக்கும் அது பெரும் அவப்பெயராக இருக்கும். எனவே அவரும் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழை தேடி என்ற பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழின் மேம்பாட்டுக்காக யார் எதை செய்தாலும் அது வரவேற்கத்து, ஆதரிக்க தக்கது. அவரது நோக்கம் நிறைவேற வாழ்த்துகிறேன்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x