Published : 26 Feb 2023 01:15 PM
Last Updated : 26 Feb 2023 01:15 PM

ஈரோடு இடைத்தேர்தல் | மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு சாவடிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன படம்: எஸ். குரு பிரசாத்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், 238 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள 2.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க, 52 இடங்களில் 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடி மையங்களில் 1,206 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.

இது தவிர கூடுதலாக 20 சதவீதம் என்ற அடிப்படையில், 48 வாக்குச் சாவடி கூடுதல் மையங்கள் (ரிசர்வ்) என மொத்தம் 286 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு நடைபெறவுள்ள வாக்குச் சாவடி மையங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா ஒரு முதன்மை அலுவலர் மற்றும் 3 நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 பேர் பணியாற்றுவர். அதன்படி, 238 வாக்குச்சாவடி மையங்களுக்கு 286 முதன்மை அலுவலர்கள், மூன்று நிலைகளிலான 858 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளில் பணிபுரிய 62 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இத்தேர்தலில் பயன்படுத்தப்படும் 1,430 வாக்குப்பதிவு எந்திரங்கள் (ஈவிஎம்), வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் 310 எந்திரங்கள் (விவிபேட்), 286 கட்டுப்பாட்டு எந்திரங்கள் (கன்ட்ரோல் யூனிட்) அனைத்தும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்பட்ட 20 சரக்கு வாகனங்களில், 20 மண்டல அலுவலர்களின் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.

இந்தப் பணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி எச். கிருஷ்ணன் உன்னி, தேர்தல் நடத்தும் அலுவலர் க. சிவகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும், அந்த வாகனத்தில் வாக்குச்சாவடி அலுவலரும், 238 வாக்குச்சாவடியிலும் பயன்படுத்தப்படும் பொருள்களான பென்சில், ரப்பர், பேனா, பசை, ஸ்டேப்ளர், ஸ்டேப்ளர் பின், சிறிய மற்றும் பெரிய பிளாஸ்டிக் டிரே, பிளாஸ்டிக் டிரம், குப்பைகளை போடுவதற்கான பிளாஸ்டிக் பக்கெட், சிறிய கயிறு, நூல், சீல் வைக்க தேவையான பொருள்கள், ஓட்டு பெட்டிகளை மறைத்து வைக்க பயன்படுத்தப்படும் பிரத்யேக அட்டை என 81 வகையான பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கும் பணியை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி எச்.கிருஷ்ணன் உன்னி, "மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஸ்டராங் ரூம் இன்று திறக்கப்பட்டு, தேர்தல் பொது பார்வையாளர் முன்னிலையில் மண்டல வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. இவற்றை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கண்டறியப்பட்டுள்ள 32 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில், கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சித்தோடு ஐ ஆர் டி டி பொறியியல் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக வரும் புகார்கள் குறித்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 796 தேர்தல் விதிமீறல் புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதிகாரிகள் மட்டுமல்ல பொதுமக்களும் விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்கலாம். இதற்காக இலவச எண் கொடுக்கப்பட்டுள்ளது.

விதிமீறல் குறித்து 10 நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் உள்ள தகுதியான வாக்காளர்கள் மட்டுமே வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்க முடியும். இதில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை. தேர்தல் நடைபெறும் 238 வாக்கு சாவடிகளிலும் நுண் பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x