Published : 26 Feb 2023 06:45 AM
Last Updated : 26 Feb 2023 06:45 AM

அணுகுமுறை பிடிக்காததால் காங்கிரஸில் இருந்து விலகினேன் - ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் விளக்கம்

சி.ஆர்.கேசவன்

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிறந்தவர் ராஜகோபாலாச்சாரி. மூத்த காங்கிரஸ் தலைவரான இவர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

இந்திய கவர்னர் ஜெனரல், தமிழக முதல்வர் பொறுப்புகளை வகித்துள்ள இவரை மூதறிஞர் ராஜாஜி என்று போற்றுவர். இவரது கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன். அமெரிக்காவில் படித்த இவர்,2001-ல் காங்கிரஸில் இணைந்தார்.

பல்வேறு பதவிகள் வகித்த இவர்தற்போது காங்கிரஸில் இருந்துவிலகியுள்ளார். இது காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சி.ஆர்.கேசவன் கூறியதாவது:

2002-ல் மத்திய பாஜக அரசு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அப்துல் கலாமை நிறுத்தியது. அப்போது கட்சிக் கொள்கை, சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு காங்கிரஸும் ஆதரவு அளித்தது. ஆனால், தற்போது பாஜக சார்பில் முதல்முறையாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் திரவுபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தியபோது ஆதரிக்காமல், அவரை தீய சக்தியின் பிரதிபலிப்பு, நாட்டின் சாபக்கேடு என்று சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்தனர்.

அதேபோல, கடந்த ஜனவரியில் 21 தீவுகளுக்கு பரம்வீர்சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர்களின் பெயர்களை மத்திய பாஜக அரசு சூட்டியது. அதில் 14 பேர் உயிர்த் தியாகம் செய்தவர்கள். ஆனால், அவர்கள் என்ன சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்தார்களா? அதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று மூத்த காங்கிரஸ் தலைவர் விமர்சித்தார்.

இதில் எனக்கு உடன்பாடில்லை. அண்மைக்காலமாக காங்கிரஸின் அணுகுமுறை மற்றும் கொள்கைகளில் இருந்து எனது கொள்கைகள் வேறுபடுகின்றன. இனியும்காங்கிரஸில் நீடிப்பது பொருத்தமாக இருக்காது என்று முடிவு எடுத்து, கட்சியில் இருந்து விலகினேன். கர்ணனும், விபீடணனும் அவர்களின் தனிப்பட்ட சிந்தனைகளுக்கு நேர்மாறான இடத்தில்இருந்தனர். தவறான இடத்தில் இருக்கிறோம் என்று தெரிந்தும், அங்கேயே இருந்து தன்னை அழித்துக்கொண்டவன் கர்ணன். நான் அரசியலில் கர்ணனாக இருக்க விரும்பவில்லை.

விபீடணன், தனது சிந்தனைக்கு நேர்மாறான இடத்தில் இருந்தாலும், அதிலிருந்து வெளியேறி, தனதுகோட்பாடுகளுக்கு ஏற்ற இடத்துக்குச் சென்றார். அப்படி எனக்கு ஏற்ற இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

2001-ல் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாதபோதுதான் நான் கட்சியில்இணைந்தேன். நான் எப்போதும் பதவிக்கு ஆசைப்பட்டதில்=லை. அண்மையில் தேசிய அளவில் முக்கியப் பதவி கொடுக்க காங்கிரஸ் விரும்பியது. ஆனால், சிந்தனை அளவில் எனக்கும், கட்சிக்கும் இடைவெளி இருப்பதால், அப்பதவியை நான் ஏற்கவில்லை.

ராகுல், சோனியா ஆகியோர், தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத் துணைத் தலைவர் பதவி, பிரச்சார் பாரதி உறுப்பினர் போன்றபொறுப்புகளைக் கொடுத்தனர். அவர்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எதிர்காலத்தில் பாஜகவில் சேருவேனா என்பதற்குகாலம்தான் பதில் கூறும். எனது எண்ணங்களுக்குப் பொருத்தமான கட்சியில் இணைந்து, பணியாற்று வேன். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸின் அணுகுமுறை, கொள்கையில் இருந்துஎனது கொள்கை வேறுபடுகிறது. இனியும் காங்கிரஸில் நீடிப்பது பொருத்தமாக இருக்காது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x