Last Updated : 25 Feb, 2023 12:53 AM

2  

Published : 25 Feb 2023 12:53 AM
Last Updated : 25 Feb 2023 12:53 AM

“தமிழக ரவுடிகள் வெளி மாநிலங்களுக்கு ஓடிவிட்டார்கள்” - டிஜிபி சைலேந்திரபாபு

விருதுநகர்: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.

திருநெல்வேலியிலிருந்து மதுரை செல்லும் வழியில் விருதுநகர் வந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று மாலை விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காவல் நிலையத்தில் வரவேற்பு மரியாதை அளித்த காவலர்களிடம் பெயர், பணியின் தன்மை, எந்தனை ஆண்டுகள் அனுபவம் என கேட்டறிந்தார். மேலும், வார விடுமுறை குறித்தும், டிஏ உள்ளிட்ட பணப்பலன்கள் முறையாக உடனடியாக கிடைக்கிறதா என்றும் கேட்டறிந்தார்.

காவல் நிலையத்திற்குள் சென்று வரவேற்பாளரான பெண் காவலரிடம் புகார் கொடுக்க வருவோரிடம் அணுகும் முறை குறித்து கேட்டறிந்து, புகார் விவரங்களை கணினியில் பதிவு செய்வது குறித்தும் ஆய்வு செய்தார். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முறையாக கோப்புகளை பராமரித்த எழுத்தருக்கு ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.

அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், "பெண் சார்பு ஆய்வாளர் துப்பாக்கி சுடுவதிலிருந்தே தமிழக காவல் துறையின் வலிமை புரியும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறைத் தண்டனை பெற்றுக்கொடுப்பதே எங்கள் நோக்கம். உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு காவல் நிலையங்களில் வரவேற்பாளர் பணி வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு 2,800 பேர் இதுவரை பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்காக தனி சீருடையும் வழங்கப்பட்டுள்ளது. தமிழக ரவுடிகள் வெளி மாநிலங்களுக்கு ஓடிவிட்டார்கள். அங்கும் இங்கும் ஒரு சில ரவுடிகள் உள்ளார்கள். போலீஸார் அவர்களை பிடிக்கும்போது தாக்குகிறார்கள். திருப்பித் தாக்குவதற்காகவே துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியுள்ளது. வெளிமாநிலத்திற்கு தப்பியோடிய குற்றவாளிகளையும் கைதுசெய்து வருகிறோம்.

கஞ்சாவை முழுமையாக அழிக்க அனைத்து தீவிர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் கஞ்சா இல்லாத மாநிலமாக அறிவிக்கும் நிலை வரும்" என்றார். ஆய்வின்போது, எஸ்.பி. ஸ்ரீனிவாசபெருமாள், டிஎஸ்பி அர்ச்சனா, இன்ஸ்பெக்டர் மாரியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x