Published : 24 Feb 2023 04:32 PM
Last Updated : 24 Feb 2023 04:32 PM

ஈரோடு கிழக்கில் முடிவுக்கு வராத ‘கூடார’ அரசியல் - கூவத்தூரை உதாரணம் காட்டி திமுக பதிலடி

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் பகுதியில் திமுகவினர் அமைத்துள்ள கூடாரம். படம்: எஸ். குரு பிரசாத்

ஈரோடு: ‘வாக்காளர்களை கூடாரத்தில் அடைத்தால், அதிமுக பெரும் போராட்டம் நடத்தும்’ என நேற்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அறிவித்த நிலையில், ‘கூவத்தூரில் மக்கள் பிரதிநிதிகளை அடைத்து வைத்து, அதன் மூலம் முதல்வரான பழனிசாமிக்கு இதுகுறித்து பேச தகுதி இல்லை’ என அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்யவும், தேர்தல் பணியாற்றவும், 30-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர். தொகுதி முழுவதும் 120 இடங்களில், தேர்தல் பணிமனை என்ற பெயரில் கூடாரம் அமைத்து, அதில் அந்தந்த வாக்காளர்களைரை அமர வைத்து, அவர்களுக்கு உணவு, டீ, ஸ்நாக்ஸ் உள்ளிட்டவற்றுடன், தினமும் ரூ 500 வழங்கி, சிறப்பான ‘கவனிப்பை’ திமுக அமைச்சர்கள் அளித்து வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர் மற்றும் கட்சியினர் வாக்கு கேட்க வரும்போது, வீடுகளில் வாக்காளர்கள் இருக்கக் கூடாது என்பதற்காக, அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்த இந்த, ‘கூடார அரசியல்’ திமுகவின் ஈரோடு இடைத்தேர்தல் ஃபார்முலா என்ற பெயர் பெற்றுள்ளது.

கடந்த வாரம் பிரச்சாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, ‘மீசை வைச்ச, வேட்டி கட்டிய ஆம்பளையாக இருந்தால், வாக்காளர்களை பட்டியில் அடைக்காமல் வெளியே விட்டு தேர்தலைச் சந்திக்க வேண்டும்’ என ஆவேசமாக பேசினார். இதன் தொடர்ச்சியாக ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, ‘பட்டியில் அடைப்பது போல், கூடாரங்களில் வாக்காளர்களை அடைத்து வைத்தால், அதிமுக பெரிய போராட்டம் நடத்தும்’ என அறிவிப்பு வெளியிட்டார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று மாலை எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ள நிலையில், திமுகவினர் அமைத்திருந்த ‘கூடாரங்களில்’ பரபரப்பு ஏற்பட்டது. பழனிசாமியின் பிரச்சாரம் காரணமாக, இன்று ‘கூடாரத்திற்கு’ வரும் வாக்காளர்களுக்கு கூடுதல் ‘கவனிப்பு’ இருக்கும் என்ற தகவலும் பரவியுள்ளது.

இந்நிலையில், கூடார ஃபார்முலாவை அமல்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் பேசியபோது, அவர் கூறியதாவது: “பத்திரிகைகளும், மீடியாக்களும் கூடாரங்களில் வாக்காளர்கள் அடைத்து வைக்கப்படுவதாக தவறான செய்தியை வெளியிட்டு வருகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதியில் பூத் வாரியாக பிரித்து நாங்கள் தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறோம். அப்பகுதி வாக்காளர்களையும், கட்சி நிர்வாகிகளையும் ஒரு இடத்தில் ஒருங்கிணைத்து, அங்கிருந்து பிரச்சாரத்திற்கு அழைத்து செல்வதற்காக தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் காலி இடம் மட்டும் கிடைத்ததால், அந்த நிலத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெற்று, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, கூடாரங்களை அமைத்து, தேர்தல் பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த கூடாரங்களை அமைக்கப்பட்டதற்கான செலவு அனைத்தும், முறையாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

அடுத்ததாக, வாக்காளர்களை யாரும் அடைத்து வைக்க முடியாது. எங்களை அடைத்து வைத்ததாக, எந்த வாக்காளரும் இதுவரை புகார் தெரிவிக்கவில்லை. அப்படி இருக்க எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி, மீசை வைத்த, வேட்டி கட்டிய ஆம்பளையாக இருந்தால், என்றெல்லாம் ஏக வசனம் பேசியுள்ளார். கூவத்தூரில் போலீஸ், அடியாட்கள் கும்பலுடன், மக்கள் பிரதிநிதிகளை (எம்.எல்.ஏ.க்கள்) அடைத்து வைத்து, முதல்வர் பதவியைப் பிடித்த பழனிசாமிக்கு, வாக்காளர்களைப் பற்றி பேச அருகதை இல்லை. கூடாரம் குறித்து இனியும் தவறாக பேசினால், அவரை கூவத்தூர் பழனிசாமி என்று அனைவரும் அழைக்கும் நிலை வரும்” என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x