Published : 28 Jul 2014 08:08 am

Updated : 28 Jul 2014 08:10 am

 

Published : 28 Jul 2014 08:08 AM
Last Updated : 28 Jul 2014 08:10 AM

களைகட்டிய ஆடி மொய் விருந்து விழா: தனிநபருக்கு வசூலான ரூ.2.50 கோடி! - இயந்திரம் மூலம் ரூபாய் நோட்டுகளை எண்ணிய வங்கி அலுவலர்கள்

2-50

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி பகுதியில் ஆடி மாதத்தில் நடைபெற்று வரும் மொய் விருந்து விழாவால் ஊரே களைகட்டியுள்ளது. இந்த மொய் விருந்துகளில் கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், கொத்தமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், சேந்தன்குடி, மாங் காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் தஞ்சை மாவட்டத் தின் தெற்குப் பகுதியான பேரா வூரணி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த 25 ஆண்டு களாக மொய் விருந்து என்ற பெயரில் கறி விருந்து அளித்து லட்சக்கணக்கிலான ரூபாய் மொய் வாங்குவது வழக்கமாக உள்ளது.

வழக்கமாக ஆடி மாதங்களில் நடத்தப்படும் இந்த விழாவை யொட்டி, கடந்த சில மாதங்களாக இப்பகுதிகளில் பொது இடங்களில் மொய் விருந்து குறித்து பெரிய அளவிலான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

தனித்தனியாக மொய் விருந்து நடத்தினால் அதிகம் செலவாகிறது என்பதால் 10, 20 பேர் சேர்ந்து ஒரே நாளில் ஒரே இடத்தில் மொய் விருந்து நடத்தும் வழக்கமும் உள்ளது.

ஆலங்குடி பகுதியில் 20 பேர் சேர்ந்து ஒரே அழைப்பிதழாக சுமார் 6000 அழைப்பிதழ்கள் தயார் செய்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து அண்மையில் ஒரே இடத்தில் மொய் விருந்து விழா நடத்தினர். கடந்த 10 நாட்களில் சுமார் 80 பேர் இவ்வாறு மொய் விருந்து விழாக்களை இப்பகுதியில் நடத்தி யுள்ளனர். இதில் பல கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தனிநபருக்கு வசூலான ரூ.2.50 கோடி…

இந்நிலையில், ஆலங்குடியை அடுத்த வடகாட்டில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற தனியொரு வரது மொய் விருந்துக்கு ரூ.4.25 லட்சம் செலவில் சுமார் 850 கிலோ ஆட்டுக்கறி சமைத்து, விருந்து பரிமாறப்பட்டது. அவருக்கு சுமார் ரூ.2.5 கோடி மொய் வந்ததாக கூறப்படுகிறது.

இங்கு உறவினர்கள், நண்பர் களால் வழங்கப்பட்ட மொய் தொகையை 20 பேர் எழுதினர். ஒரு வங்கி கிளை நிர்வாகத்தினர் விழா பந்தலில் அரங்கு அமைத்து, ரூபாய் நோட்டுகளை எண்ணும் இயந்திரம் மூலம் மொய் தொகையை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். பலபேர் சேர்ந்து நடத்தும் மொய் விருந்தில் வசூலாகும் தொகையை தனிநபரே வாங்கியிருப்பது குறித்து இப்பகுதியில் ஆச்சரியமான விஷயமாக பேசப்பட்டது.

மொய்யால் வாழ்ந்தவர்களும் உண்டு, வீழ்ந்தவர்களும்உண்டு…

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகையில், ஆடிமாதத்தில் எங்களுக்குள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை விழா நடத்தி மொய் வழங்கி வருகிறோம். இது ஒருவகை சேமிப் பாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்வதைப் போன்றதுமாக கருதுகிறோம்

மொய் விருந்து விழாவில் வசூலாகும் தொகையைப் பயன் படுத்தி பலர் தங்களது பிள்ளை கள் உயர்கல்வி பயிலவும், திரு மணம் செய்விக்கவும் தொழிலை விரிவுபடுத்தவும் போன்ற பல்வேறு செயல்களுக்கு பயன்படுத்து கின்றனர்.

ஆனால், இந்தத் தொகையை ஆடம்பரமாக தவறான வழியில் செலவு செய்துவிட்டு, மேற் கொண்டு வருமானம் பெற முடி யாத நிலையில் இருந்தால் அது விபரீதத்தில்தான் முடியும். அப்படியும் நடந்திருக்கிறது. மொய் யால் வாழ்ந்தவர்களும் உண்டு, வீழ்ந்தவர்களும் உண்டு.

இந்த மொய் விருந்து விழாக் களில் பலர் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதாகவும் கூறு கிறார்கள். இருந்தாலும் அதையும் நாங்களே கண்காணித்து விடு வோம் என்றனர்.

“டாஸ்மாக்” விற்பனை படுஜோர்!

மொய் விருந்து நடைபெற்ற வடகாடு கிராமத்தில் உள்ள இரண்டு அரசு மதுபானக் கடைகளிலும் ஞாயிற்றுக்கிழமை மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. காரணம் மொய் விருந்தில் அசைவ உணவு என்பதால் விருந்துக்கு வந்தவர்களின் கூட்டம் மதுபான கடையையும் மொய்த்துக் கொண்டது. “சாதாரண நாட்களில் சுமார் ரூ. 60 ஆயிரத்துக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். மொய் விருந்து நடந்ததால் விற்பனை இரு மடங்குக்கும் அதிகமாக இருந்ததாக” டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர். டாஸ்மாக் விற்பனையின் முழு விவரம் இரவுதான் தெரியவரும் என்றும் அவர்கள் கூறினர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

ஆடி மொய் விருந்து விழாவசூலான ரூ.2.50 கோடி"டாஸ்மாக்" விற்பனைவங்கி அலுவலர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author