Published : 19 May 2017 01:51 PM
Last Updated : 19 May 2017 01:51 PM

சிபிஎஸ்இ உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்குக: ஸ்டாலின்

தமிழ் மொழி கற்கும் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' 'தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளுக்கு இடமளித்து, இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மன்றம் தீர்மானிக்கிறது' என்று பேரறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த முதல் திமுக அரசு 23.1.1968 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பொன்விழா ஆண்டில் நாம் இன்றைக்குப் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.

மொழிப் போராட்டத்தில் மாணவர்களின் எழுச்சிக்குப் பிறகு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் திமுக ஆட்சியில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வித்திட்ட மிக முக்கியமான நடவடிக்கை என்று இன்றைக்கும் போற்றப்படுகிறது.

அந்த பேரறிஞர் அண்ணா வழிவந்து, சட்டப்பேரவை வைரவிழா காணும் தலைவர் கருணாநிதி 'முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடம்' என்ற தமிழ் மொழி கற்கும் சட்டத்தை 13.6.2006 அன்று இயற்றி தமிழ் மொழி வரலாற்றில் மிக முக்கியமான சாதனையை நிகழ்த்தினார்.

இந்தச் சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் டி. முருகேசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தை தன் ஆளுமையை வளர்த்துக் கொள்ள தாய்மொழி மிக அவசியம்' என்றும், 'அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை' என்றும் கூறி 'தமிழ் மொழி கற்கும் சட்டம் 2006 செல்லும்' என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றபோது, அங்கும் இந்தச் சட்டம் செல்லும் என்று கூறப்பட்டு, திமுக ஆட்சியிலிருந்த வரை இச்சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டது. தமிழ் ஆசிரியர்கள் 525 பேர் நியமிக்கப்பட்டு, தமிழ் மொழி கட்டாயமாக கற்பதில் எந்தத் தொய்வும் இல்லாமல் தலைவர் கருணாநிதி பார்த்துக் கொண்டார்.

திமுக அரசு கொண்டுவந்த தமிழ் கற்கும் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை 'தமிழ் மொழி கட்டாயம்' என்று 18.9.2014 அன்று அதிமுக அரசுக்கு பெயரளவிற்கு ஆணை வெளியிட்டாலும், இன்றுவரை அந்த அரசு ஆணை முறைப்படி செயல்படுத்தப்படவில்லை.

ஆசிரியர்கள் நியமனம், பள்ளிகளில் உட்கட்டமைப்புகள், அதற்கேற்ற விதிமுறைகள் போன்றவற்றை ஏற்படுத்தாமல் அதிமுக அரசு தொடர்ந்து தாமதம் செய்து வருவதால் தமிழ் அல்லாத மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் பொதுத்தேர்வு எழுத, தொடர்ந்து விலக்கு பெற்று வருகிறார்கள்.

தமிழை மத்திய ஆட்சி மொழியாக்குவது, தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்குவது போன்றவற்றில் மத்திய அரசை உறுதியாக வலியுறுத்தாமல் அலட்சியம் காட்டி வரும் அதிமுக அரசு செம்மொழிப் பூங்கா, செம்மொழி நூலகம் போன்றவற்றை சீர்குலைத்தது. அதேபோல், இப்போது தமிழ் மொழி கற்கும் சட்டத்தின் நோக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கிறது.

மத்தியில் உள்ள பாஜக அரசு கண்ணை மூடிக்கொண்டு இந்தித் திணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நேரத்தில் அன்னைத் தமிழ் மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகிறது.

ஆனால், தமிழ் மொழி பற்றிய சிந்தனையை வருங்கால தலைமுறையிடம் முழுவதுமாக மறக்கடித்து விட வேண்டும் என்று திட்டம்போட்டு மத்திய அரசு செயல்படுவது போல், அதிமுக அரசும் செயல்படுவது கவலையளிப்பது மட்டுமின்றி, தமிழ் மொழியின் மீது மாணவ, மாணவியருக்கு இருக்கும் பற்று மற்றும் பாசத்தை பட்டுப்போகச் செய்யும் ஆபத்தான முயற்சியாக அமைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆகவே சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

அரசுப் பள்ளிகளிலும் போதிய தமிழாசிரியர்களை நியமித்து, தமிழ் மொழி கற்கும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்கவேண்டும் என்று அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், தமிழ் மொழியின் தொன்மையையும், வளத்தையும் இளைய சமுதாயத்தினர் அறிந்துகொள்ளும் விதத்தில், ஆக்கபூர்வமான முயற்சிகளில் அதிமுக அரசு செயல்பட வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x