Published : 23 Feb 2023 03:46 PM
Last Updated : 23 Feb 2023 03:46 PM

அதிமுக பொதுக்குழு வழக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பும்: முழு விவரம்

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக எந்த கோரிக்கையும் தங்கள் முன்பு வைக்கப்படவில்லை. எனவே, தீர்மானங்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை என்று தீர்ப்பளித்துள்ளது.

ஒற்றைத் தலைமை பிரச்சினை: அதிமுக கட்சி விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்கட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், சில மாதங்களாக ஒருங்கிணைப்பாளர்கள் முதல் கிளைச் செயலாளர் வரையிலான பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை, கட்சியின் பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெற்று, அதன்பின் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.

இதற்காக, 2022 ஜூன் 23-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, ஜூன் 14-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து நிர்வாகிகள் பேசியதால் கட்சிக்குள் பிரச்சினை எழுந்தது. இதைத்தொடர்ந்து ஓபிஎஸ்ஸும் பழனிசாமியும் தங்கள் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தினர்.

ஜூன் 23 பொதுக்குழு: ஒற்றைத் தலைமை இப்போதைக்கு தேவையில்லை. இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கபப்ட்டது. ஒற்றைத் தலைமையை வலியுறுத்திய பழனிசாமி தரப்பினர், பொதுக்குழு கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று முடிவெடுத்தனர்.பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று பழனிசாமிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார். ஆனால், திட்டமிட்டப்படி ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

ஜூலை 11 பொதுக்குழு: இந்த பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடைவிதிக்க கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பொதுக்குழுக் கூட்டம் நடத்தலாம் என்று உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவின் அடிப்படையில் அந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

இபிஎஸ் தேர்வு: 2022 ஜூலை 11ம் தேதி கூட்டப்படவிருந்து அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக்குழுவை நடத்த தடையில்லை என்று தீர்ப்பளித்தார். இதனையடுத்து, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்புதல் பெறப்பட்டு 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு: இதைத்தொடர்ந்து, ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரியும், இந்த பொதுக்குழு சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரியும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

"பொதுக்குழு செல்லும்" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பளித்தனர். அதில், "ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்ட வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டது. உரிய சட்டவிதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டனவா? என்பது குறித்தும் ஆராயப்பட்டன. அதன் அடிப்படையில்,அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கிய தீர்ப்பை உறுதி செய்யப்படுகிறது. கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும்.

மேலும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக எந்த கோரிக்கையும் எங்கள் முன்பு வைக்கப்படவில்லை. எனவே, தீர்மானங்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை. எதிர்காலத்தில் இது தொடர்பாக வழக்கோ அல்லது தேர்தல் ஆணையத்தில் முறையீடு யாரேனும் தாக்கல் செய்தால் அப்போது அதன் மீதான நடவடிக்கைகள் சட்டப்படி தொடரும்.

அதேபோல் பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்கு மீதான விசாரணை நடைபெறுவதில் எந்த பிரச்சினையும் இல்லை எனக்கூறி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் இடையீடு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x