Published : 23 Feb 2023 10:43 AM
Last Updated : 23 Feb 2023 10:43 AM

பாஜகவை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

திருமாவளவன் | கோப்புப் படம்

சென்னை: மக்கள் விரோத பாஜகவை கண்டித்து சென்னையில் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசிக தலைமைச் நிர்வாகக் குழு கூட்ட தீர்மானம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு முயலும் சனாதன சக்திகளைக் கண்டித்து சென்னையில் பிப்ரவரி 28ம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என நேற்று (பிப்.22 ) கூடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சிகளின் தலைவர்களையும் பங்கேற்க அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து அதனைச் செயல்பட விடாமல் முடக்குவதற்குத் தமிழகத்தில் திட்டமிட்ட முறையில் பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. மத அடிப்படையில் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதோடு சாதி வெறியையும் ஊக்கப்படுத்தி வருகின்றன.

தனிநபர்களுக்கு எதிராகத் தரங்கெட்டுப் பேசுவது, வீம்புக்கு வம்பிழுக்கும் வகையில் வேண்டுமென்றே அரசியல் தலைவர்களுக்கு எதிராக அவதூறுகள் பரப்புவது ; ஆத்திரமூட்டும் வகையில் ஆபாசமான விமர்சனங்களின் மூலம் இழிவுபடுத்துவது; தாங்களே தங்களுக்கு எதிராகப் பெட்ரோல் குண்டுகளை வீசிக்கொண்டு வன்முறைகளைத் தூண்டும் வகையில் நாடகமாடுவது; கூலிப்படையினரை ஏவி கொலைகள் செய்வது; ஊடகத்தினரை மிரட்டுவது; சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகளைப் பரப்பி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவது என அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

இத்தகைய மக்கள்விரோத போக்குகளுக்கு தமிழக ஆளுநரும் துணையாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அத்துடன், அவரது நடவடிக்கைகள் சனாதன சக்திகளின் வன்முறை போக்குகளுக்கு இந்திய ஒன்றிய அரசின் மறைமுகமான ஆதரவும் இருக்கிறது எனக் காட்டுகிறது. மேலும், சமூக விரோதிகளின் துணையோடு எதிர்க்கட்சியினரை மட்டுமின்றி சொந்த கட்சிக்காரர்களையே அவதூறுகளின் மூலம் அச்சுறுத்துவது என்பதை பாஜகவினர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக, அந்தக் கட்சியில் இருக்கும் பெண்களையே வெளிப்படையாக ‘ப்ளாக் மெயில்’ செய்கின்றனர். இத்தகைய சமூகவிரோத மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை ஊக்குவிக்கும் ஆளுநர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

குறிப்பாக, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த வாசகத்தைப் படிக்க மறுத்த ஆளுநர், இன்றும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து திமுக அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் கடமையைச் செய்யாமல், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலுக்கு அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்வதுபோல அவரது பேச்சுகளும் அறிக்கைகளும் உள்ளன.

இவை எல்லாமே வட மாநிலங்களில் செய்வதைப் போல தமிழகத்திலும் செய்து இதனை ஒரு கலவர பூமியாக மாற்றும் சதித்திட்டத்தோடு செய்யப்படுகின்றன. சனாதனப் பயங்கரவாதிகளின் இத்தகைய சதியை முறியடித்து தமிழகத்தில் சமூக அமைதியையும் சமய நல்லிணக்கத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை சனநாயக சக்திகளான நம் அனைவருக்கும் உள்ளது.

அதனடிப்படையில் தான் சனாதன சக்திகளுக்கு எதிராக இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானித்துள்ளது. எனவே, பிப்ரவரி 28-ம் நாள் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சனநாயக சக்திகள் திரளாகப் பங்கேற்க வேண்டுமாறு அழைப்பு விடுக்கிறோம்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x