Published : 23 Feb 2023 07:29 AM
Last Updated : 23 Feb 2023 07:29 AM

அனைத்து துறைகளின் கருத்தை கேட்டு வேளாண் பட்ஜெட்டை தயாரிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

சென்னை: அனைத்து துறைகளின் கருத்துகளையும் கேட்டு வேளாண் பட்ஜெட் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். 2023-24 நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தயாரிப்பதற்கு முன்பு, விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு, அதற்கேற்ப வேளாண் பட்ஜெட்டை தயாரிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, திண்டுக்கல், கரூர்,தேனி, திருச்சி, திருப்பூர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் வேளாண் துறைஅமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. இதில், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

இதுபோல, அனைத்து பகுதிகளிலும், அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளும் விரைவில் கேட்கப்பட உள்ளன. மாவட்டம்தோறும் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டங்களில் அவர்கள் தெரிவித்த கருத்துகளும் தொகுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 2023-24 நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தயாரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் கடந்த 21-ம் தேதி நடந்தது. இதில் நிதி, வருவாய், வேளாண்மை, வனம், நீர்வளம், கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலர்கள், வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது, விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை உள்ளடக்கி, அனைத்து துறை அலுவலர்களும் ஆலோசித்து வேளாண் பட்ஜெட்டை தயாரிக்குமாறு தலைமைச் செயலர் அறிவுரை வழங்கினார். 810-க்கும் மேற்பட்ட கோரிக்கை இதுகுறித்து வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வேளாண் பட்ஜெட் தொடர்பாக மாநிலம் முழுவதிலும் இருந்து இதுவரை 810-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வந்துள்ளன.

இதுதவிர, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் குறித்த கருத்துகளை, வேளாண் துறை செயலருக்கு கடிதம் வாயிலாகவும், tnfarmersbudget@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், 9363440360 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும், உழவன் செயலி மூலமாகவும் அனைவரும் தெரிவிக்கலாம்’ என்று கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x