Published : 21 Feb 2023 11:53 PM
Last Updated : 21 Feb 2023 11:53 PM

திருப்பூர் | குறைதீர் கூட்டத்தில் தொடரும் அவலம் - இடவசதி இல்லாததால் ஜன்னல் வழியே கூட்டத்தை பார்த்த விவசாயிகள்

திருப்பூர்: திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இருக்கை, இட வசதி இல்லாததால் அறை ஜன்னல் வழியே கூட்டத்தை பார்த்தனர் விவசாயிகள்.

திருப்பூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்கூட்டம் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் இன்று நடந்ததில் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு மனு அளிக்க திரண்டனர். வழக்கம் போல் போதிய இடவசதி இன்றி விவசாயிகள் அவதி அடைந்தனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. போதிய இருக்கைகள் மற்றும் இடவசதிகள் அமைக்கவில்லை. கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தற்போது கூட்டம் நடந்தும் வரும் அறையை ஒட்டிய பகுதி காலியாகவே உள்ளது. அதனை பயன்படுத்தினால் விவசாயிகளும், அதிகாரிகளும் முழுமையாக பயன்பெறுவார்கள்.

திருப்பூர் வடக்கு, தெற்கு மட்டுமின்றி பல்லடம், ஊத்துக்குளி மற்றும் அவிநாசி என பல்வேறு வட்டங்களில் இருந்து விவசாயிகள் வருகின்றனர். அதேபோல் பல்வேறு துறை அதிகாரிகளும் சுமார் 40 பேர் பங்கேற்கின்றனர். அனைவருக்கும் போதிய இடவசதி இல்லை. கடந்த கூட்டத்தின் இதே நிலையை அடுத்த கூட்டத்தில் சரிசெய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போதும் குறைநிவர்த்தி செய்யப்படவில்லை. இதனால் கூட்ட அரங்கு நடக்கும் ஜன்னல் வழியாகவே குறைதீர் கூட்டத்தை கண்டோம். மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேச வாய்ப்பு அளிக்காததால், இங்கு வருகிறோம்.

இங்கும் போதிய இருக்கை மற்றும் இடவசதி இல்லாத நிலையில் வரும் காலங்களில் இந்த கூட்டத்தையும் விவசாயிகள் புறக்கணிக்கும் நிலையே உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை மனுக்களாக பார்க்காமல், அவர்களின் வாழ்வாதாரமாக பார்த்து பிரச்சினைகளை களைய வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இங்கு மாதந்தோறும் நடக்கும் கூட்டத்துக்கு போதிய எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் இருப்பது, விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x