Published : 21 Feb 2023 07:11 AM
Last Updated : 21 Feb 2023 07:11 AM

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் தமிழக மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின், கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களை கோழைத்தனமாகத் தாக்கியதோடு, பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற பெருந்தலைவர்களின் படங்களையும் அடித்து நொறுக்கியுள்ள ஏபிவிபி அமைப்பினரின் செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தமிழக மாணவர்களைப் பாதுகாக்குமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தரை கேட்டுக்கொள்கிறேன்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பு திட்டமிட்டு பெரியார் படங்களை உடைத்துள்ளது. இந்த வன்முறையைத் தட்டிக்கேட்ட தமிழகமாணவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக நிர்வாகமும் தாக்குதல் நடத்திய கூட்டத்துக்கு ஆதரவாகவே இயங்குகிறது. தமிழக அரசும், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் உடனடியாகத் தலையிட்டு சட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவ வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பினர் பெரியார் படத்தையும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தடுக்கச் சென்ற மாணவர்கள் மீது 15-க்கும் மேற்பட்டோர் தாக்குதல்நடத்தியுள்ளனர். இதில் தமிழக மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: டெல்லி பல்கலைக்கழகத்தில் பேரணியின்போது தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர். பெரியார், கார்ல்மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களின்உருவப்படங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவை கண்டிக்கத்தக்கவை. மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்: டெல்லி ஜவஹர்லால் நேருபல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பினர் பெரியார், மார்க்ஸ்ஆகியோரின் உருவப்படங்களை அவமதித்து சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தட்டிக் கேட்ட தமிழக மாணவர் தாக்கப் பட்டுள்ளார்.

உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த வன்முறைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடராமல் முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்திட வேண்டும். வன்முறையில் ஈடுபட்ட ஏபிவிபி மாணவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x