Published : 21 Feb 2023 07:32 AM
Last Updated : 21 Feb 2023 07:32 AM

திருநெல்வேலி | மகனுக்கு சரியாக முடிவெட்டாததால் சலூன் கடையை பூட்டிய காவலர் இடமாற்றம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் டி.எம்.நேவிஸ் பிரிட்டோ என்பவர் காவலராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரது மகன், அந்தப் பகுதியில் உள்ள ஒரு சலூன் கடைக்குச் சென்று முடி திருத்தம் செய்துள்ளார்.

ஆனால், முடியை சரியாகத் திருத்த வில்லை என்று ஆத்திரம் அடைந்த நேவிஸ் பிரிட்டோ, தனது மனைவி மற்றும் மகனை அழைத்துக்கொண்டு, தவறுதலாக மற்றொரு சலூன் கடைக்குச் சென்றுள்ளார். அதன் உரிமையாளரை செல்போனில் தொடர்புகொண்டு அவதூறாகப் பேசியதுடன், கடையைப் பூட்டியுள்ளார்.

சிறிது நேரத்தில் அந்த கடையின் உரிமையாளர் யுவ சிவராமன் அங்கு வந்து நேவிஸ் பிரிட்டோவின் மகனிடம், ‘‘உனக்கு நான் முடி வெட்டினேனா?” என்று கேட்டபோது, அவர் இல்லை என்று தெரிவித்துள்ளார். அப்போதுதான் தவறுதலாக வேறு சலூன் கடையை பூட்டியதை நேவிஸ் பிரிட்டோ உணர்ந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இது தொடர்பாக வள்ளியூர் டிஎஸ்பி யோகேஸ் குமார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், நேவிஸ் பிரிட்டோவை ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து திருநெல்வேலி எஸ்.பி. சரவணன் உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x