Published : 12 May 2017 07:20 AM
Last Updated : 12 May 2017 07:20 AM

பள்ளி பொதுத் தேர்வில் ரேங்க் முறை ஒழிப்பு: மூத்த கல்வியாளர்கள் வரவேற்பு

பள்ளி பொதுத் தேர்வு களில் மதிப்பெண் அடிப்படையி லான ரேங்க் முறை கைவிடப் பட்டுள்ளதற்கு மூத்த கல்வியாளர் கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர் களின் ரேங்க் பட்டியல் ஆண்டு தோறும் வெளியிடப்படும். இந்த முறையால் ஓரிரு மதிப்பெண்களில் ரேங்கை பறிகொடுத்த மாணவ-மாணவிகள் மனரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த முறையை கைவிட வேண்டும் என்று கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது அந்த முறை கைவிடப்பட்டுள்ளது. அதற்கு கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் கூறிய தாவது:

பள்ளித் தேர்வில் ரேங்க் போடுவது என்பதே பழுதுப்பட்ட முறை. ஒரு ஆசிரியர் ஒரு நாளைக்கு 250 முதல் 300 விடைத்தாள்களை திருத்துகிறார். ஒவ்வொரு ஆசிரிய ரும் ஒரு விதத்தில் திருத்துவார். ஒரு கேள்விக்கு ஒரு ஆசிரியர் 8 மதிப்பெண் கொடுத்தால், மற்றொருவர் 7 மதிப்பெண் கொடுக்க வாய்ப்புள்ளது. மதிப்பெண் என்பது திருத்துபவரைப் பொருத்தது.

குறிப்பிட்ட ஆசிரியர் விடைத்தாளை இன்று திருத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம், அவரே அதே விடைத்தாளை மறுநாள் திருத்தினால் மதிப்பெண்ணில் மாற்றம் இருக்கும். எனவே மதிப்பெண் என்பது ஆளுக்கு ஆள், நாளுக்கு நாள் மாறுபடும். ரேங்க் முறையை அகற்ற வேண்டும் என்று கல்வியாளர்கள் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறோம். தற்போது ரேங்க் முறை ஒழிக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம்.

முன்பெல்லாம் தனியார் பள்ளிகள் மாணவர்களை ஈர்க்க ரேங்க் என்ற கவர்ச்சியை காட்டுவார்கள். இனிமேல் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்கியுள்ளோம் என்பதை வைத்து விளம்பரம் செய்வார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:

இது முழுக்க முழுக்க வரவேற்க வேண்டிய விஷயம். கற்றல் செயல்பாட்டில் போட்டி இருக்கக் கூடாது. போட்டி இருந்ததால் சக மாணவரை மனிதனாக பார்ப்பதற்கு பதிலாக போட்டியாளராக பார்க்கும் சூழல் இருந்தது. வணிக ரீதியாக இயங்கக்கூடிய பள்ளிகள் வியாபார உத்தியாக ரேங்கை பயன்படுத்தின. இந்த அறிவிப்பு வணிக ரீதியாக செயல்படும் பள்ளிகளுக்கு வேண்டுமானால் அதிர்ச்சி கொடுத்திருக்கலாம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

தன்னிடம் படித்த மாணவர்கள் சமூகத்தில் பெரிய ஆளுமையாக சிறந்து வருவதே ஒரு ஆசிரியருக்கு உண்மையான அங்கீகாரம். மதிப்பெண்கள் அல்ல. அப்படிதான் உலகம் முழுவதும் பள்ளிகள் இயங்குகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் கால் நூற்றாண்டுக்கு மேல் வெறும் மதிப்பெண் மட்டும் முக்கியம் என்ற நிலை உள்ளது. அதற்கு இது ஒரு முற்றுப்புள்ளி. தமிழகத்தில் நிகழவுள்ள கல்வித்துறை மாற்றத்துக்கு இது ஒரு தொடக்கப்புள்ளி. இந்த அறிவிப்பை கொடுத்த தமிழக அரசை பாராட்டுகிறோம். இந்த அறிவிப்பு மாணவர்கள் தற்கொலையை தடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தர மதிப்பீட்டு முறை தேவை: கல்வியாளர்கள் கருத்து

ஏ.ஜாகிதாபேகம், (காந்திகிராமம் பல்கலைக்கழக பேராசிரியர்):

மதிப்பெண் ரேங்க் பட்டியல் முறையால் ரேங்க் பெறாதவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். அது அவர்களுடைய உயர் கல்வியையே பாதிக்கிறது. தனியார் பள்ளிகள் ரேங்க்கை வைத்து மாணவர் சேர்க்கையில் வணிகரீதியாக சம்பாதிப்பதைத் தடுக்க வாய்ப்பு உருவாகும். முதல் வகுப்பு முதலே ரேங்க் மதிப்பீட்டு முறையை நீக்கி தரமதிப்பீட்டு முறையைப் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும்.

சு.பாஸ்கரன்(வன்னிவேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்):

ரேங்க் முறையால் பள்ளிகளுக்கிடையேயும், ஒரே பள்ளியில் படிக்கும் சக மாணவர்களிடையேயும் வேறுபாடு நிலவுகிறது. புதிய முறையால் இந்த வேறுபாடு இனி இருக்காது. மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே மாணவர்களை தயார்படுத்தாமல் அவர்களின் தனித்திறமையை வளர்க்க முடியும். மனப்பாடம் மட்டுமே செய்ய வேண்டிய நிலை மாணவர்களுக்கு இருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x