Last Updated : 20 Feb, 2023 10:03 PM

 

Published : 20 Feb 2023 10:03 PM
Last Updated : 20 Feb 2023 10:03 PM

ஆன்லைனில் அபராதம் விதிப்பதை கைவிடக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்: லாரி சம்மேளனம் அறிவிப்பு

சேலம் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் | கோப்புப்படம்

நாமக்கல்: ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வலியுறுத்தி விரைவில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் சி.தன்ராஜ் தெரிவித்தார்.

நாமக்கல்லில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற சம்மேளன தலைவர் சி.தன்ராஜ் கூறியதாவது: "தமிழகத்தில் போலீசார் ஆன்லைன் மூலம் லாரிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இதில் பல முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. வடமாநிலங்களில் ஓடிக்கொண்டிருக்கும் லாரிகளுக்கு, தமிழகத்தில் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கின்றனர்.

அபராதம் விதித்தது லாரி உரிமையாளர்களுக்கு எஸ்எம்எஸ் வந்தபிறகுதான் தெரிகிறது. பின்னர், இது தொடர்பாக யாரிடமும் விளக்கம் கேட்க முடியவில்லை. இதை கைவிடக் கோரி கடந்த ஜனவரி 23ம் தேதி மாதம் தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள போலீஸ் எஸ்பி அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது.

இதுபோல் சென்னையில் போலீஸ் டிஜிபியை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அதன்பின் 15 நாட்கள் ஆன்லைனில் அபராதம் விதிப்பது குறைந்திருந்தது. கடந்த 1 வாரமாக மீண்டும் ஆன்லைன் அபராதம் விதிப்பது அதிகரித்துள்ளது. எனவே, இன்னும் 20 நாட்களில் ஆன்லைன் அபராதம் விதிக்கும் முறையை முற்றிலும் மாற்றி அமைக்காவிட்டால் விரைவில் சென்னையில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மூலம் ஆயிரக்கணக்கான லாரி உரிமையாளர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x