Published : 20 Feb 2023 12:20 PM
Last Updated : 20 Feb 2023 12:20 PM

ஈரோடு கிழக்கு தொகுதியில் சுயேச்சைகளிடம் போன ‘குக்கரும், டார்ச்லைட்டும்...’ ‘சின்ன’ விவகாரமா சின்னம் ஒதுக்கீடு?

ஈரோடு: தேர்தல் களத்தில் சின்னத்தின் முக்கியத்துவத்தை பிரதான கட்சிகள் உணர்ந்துள்ள நிலையில், ஆர்கே நகர் தொகுதியில் சாதனை படைத்த குக்கரும், ஈரோடு கிழக்கில் கடந்த தேர்தலில் 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற டார்ச்லைட் சின்னமும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சின்னத்திற்கு மட்டும் தனி மரியாதை கிடைக்குமா என்பது வாக்கு எண்ணிக்கையின்போது தெரியவரும்.

தேர்தல் களத்தை அணுகும் அரசியல் கட்சிகளுக்கு, ‘சின்னம்’ என்பது உயிர் போன்றது. தமிழகத்தில் திமுகவில் இருந்து வைகோ பிரிந்தபோது உதயசூரியன் சின்னத்தை வசமாக்க நினைத்தது முதல், அதிமுகவில் இரட்டை இலையைக் கைப்பற்ற ஜெயலலிதா, ஜானகி, திருநாவுக்கரசரின் தொடங்கி தற்போது ஈபிஎஸ் - .ஓபிஎஸ் வரை நடந்த யுத்த வரலாறும் சின்னத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. தமிழகம் மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்களில் கட்சிகளில் பிளவு ஏற்படும் போதும், தலைமையில் வெற்றிடம் ஏற்படும் போதும் ‘சின்னம்’ யார் பக்கம் என்பதே கருப்பொருளாக மாறிவிடுகிறது.

சிறை சென்ற வரலாறு: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறை சென்ற சம்பவமும் உண்டு. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவிற்கு சின்னம் ஒதுக்கிய விவகாரத்தில், ரூ 2000 கோடி அளவில் பணம் கைமாறியுள்ளது என அக்கட்சியின் எம்பி சஞ்சய் ராவாத் கூறியுள்ளதன் மூலம், சின்னம் என்பது சின்ன விஷயமில்லை என்பது தெளிவாகிறது. தேர்தல் நேரத்தில் மாற்றுக்கட்சிக்கு மாறியவர்கள், ‘சின்ன’ விவகாரத்தால் தோல்வியை தழுவியுள்ளனர். அதிமுகவில் இருந்து திமுக விற்கு வந்த தற்போதைய அமைச்சர்கள் முத்துசாமி, சேகர்பாபு போன்றவர்கள் கடந்த காலத்தில் இதற்கு உதாரணமாக இருந்துள்ளனர்.

ஈரோடு தேர்தல் களம்: ஈரோடு கிழக்கு தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் - கை, அதிமுக – இரட்டைஇலை, தேமுதிக -முரசு, நாம் தமிழர் - கரும்புடன் கூடிய விவசாயி ஆகிய அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னம் தொகுதி முழுவதும் பரவலாக அறியப்பட்டுள்ளது. இந்த வகையில் கடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகளை வாங்கிய மக்கள் நீதி மய்யம் இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கில் போட்டியிடும் விஸ்வபாரத் மக்கள் கட்சி என்ற பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் வேலுமணிக்கு டார்ச் லைட் சின்னம் கிடைத்துள்ளது.

‘கை’ காட்டிய கமல்ஹாசன்: ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், ஆபத்து காலம் என்பதால், இன்னொரு சின்னத்திற்கு வாக்கு கேட்க வந்துள்ளேன் என்றுதான் தனது பேச்சினைத் தொடங்கினார். தனது பிரச்சாரத்தை முடிக்கும் போது, பெரியாரின் பேரன் ஈவிகேஎஸ் இளக்கோவனை ஆதரியுங்கள் என்று கமல் குறிப்பிட, அருகில் இருந்த இளங்கோவன், சின்னத்தை சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தனது கையை உயர்த்தி, கை சின்னத்திற்கு வாக்கு கேட்டார் கமல்ஹாசன்.

இந்த நிலையில் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு பெற்ற விஸ்வபாரத் மக்கள் கட்சி வேட்பாளர் வேலுமணி கூறியதாவது
சேலம் ஆத்தூர் எனக்கு சொந்த ஊர். எனக்கு இதுதான் முதல் தேர்தல், எங்களது விஸ்வகர்மா சமுதாயத்தின் சார்பில், என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். எனக்கு சுத்தி சின்னம் வேண்டும் என்றுதான் கேட்டேன். அது பட்டியலில் இல்லாததால், டார்ச்லைட் சின்னம் குலுக்கல் முறையில் கிடைத்தது.

நேற்று அவரிடம்… இன்று என்னிடம்... டார்ச்லைட் சின்னம் இதுக்கு முன்னாலே கமலிடம் இருந்தது. இப்ப என்கிட்ட இருக்கு. கமல் சின்னம் என்று நினைத்து கொஞ்சம் பேர் எனக்கு ஓட்டு போடுவாங்கன்னு நினைக்கிறேன். வாக்காளர்களுக்கு 25 வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். நான் ஐந்து பேரோட பிரச்சாரத்திற்கு போகிறேன். இதுவரைக்கும் ரூ 5 லட்சம் செலவாகியிருக்கிறது. இதுவரைக்கும் ஈரோடு வந்ததில்லை. பெரியார் மண்ணில் வந்து நிற்கிறேன். அதுவே ஒரு பெருமை’ என்று சொல்லி முடித்தார் வேலுமணி.

இதேபோல் அமமுகவின் சின்னமாக அறியப்பட்ட குக்கர் சின்னத்தில், சிவபிரசாந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பல நாட்கள் பிரச்சாரம் நடந்தது. அதன்பின், டிடிவி தினகரன் தனது வேட்பாளரை திரும்பப் பெற்றுக் கொண்டார். இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சாதனை படைத்த டிடிவி தினகரின் குக்கர் சின்னத்தை பெற 4 வேட்பாளர்கள் விருப்பம் தெரிவிக்க, கொங்கு தேச மக்கள் மறுமலர்ச்சி கட்சியின் வேட்பாளர் கே.பி.எம். ராஜாவிற்கு, குலுக்கல் முறையில் குக்கர் சின்னம் கிடைத்துள்ளது.

குக்கரின் சிறப்பு இதுகுறித்து வேட்பாளர் கே.பி.எம்.ராஜா கூறியதாவது: திருச்சியை சேர்ந்த நான், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன். காலையில் ஒருத்தர் சாப்பிட வாங்கி தருகிறார், பிரச்சார வாகனம் இலவசமாக கிடைக்கிறது. அதனால், எனக்கு இதுவரைக்கும் ரூ 30 ஆயிரம் தான் செலவாகி உள்ளது. அதிமுக – திமுகவை எதிர்த்து நின்று வென்ற சின்னமான குக்கர் சின்னத்தை நான் கேட்டுப் பெற்றேன். பிரச்சாரத்தில் குக்கர் சின்னத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. நாங்கள் பேரத்திற்கு சோரம் போக மாட்டோம். கோடிகளை விட கொள்கை முக்கியம்’ என்று முழங்கி முடித்தார் வேட்பாளர் ராஜா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x