Published : 19 Feb 2023 11:45 PM
Last Updated : 19 Feb 2023 11:45 PM

அரசியலுக்கு வரும் பெண்களுக்கு அன்னை சத்தியவாணி முத்து ஒரு பாடம் - முதல்வர் ஸ்டாலின்

அன்னை சத்தியவாணி முத்து அவர்களின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஞாயிறு (பிப்.19) அன்று மாலை திராவிட முன்னேற்ற கழக மகளிரணியின் சார்பில் சென்னை அடையாற்றில் அமைந்துள்ள முத்தமிழ்ப் பேரவையில் நடத்தப்பட்ட அன்னை சத்தியவாணி முத்து அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.

அதில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தது.

“பெண்களை எல்லாம் பேதையர் என்று
மண்ணினும் கீழாய் மதித்த நாளில் -
மடைமைச் சிறைகளை உடைத்துத் தகர்த்துப்
புடவைச் சிறுத்தையாய் புறப்பட்டு வந்த
சத்தியவாணித் தாய் நீ!

சிற்றூர் பேரூர் நகரங்கள் அனைத்தும்
சுற்றிய புரட்சிச் சூறாவளி நீ என்பதால் -
ஆயிரம் சரித்திரம் அடங்கிய
திராவிட இயக்கத்திலே
உனக்கோர் சரித்திரம் உண்டு!

அரை நூற்றாண்டுப்
பொதுத்தொண்டு செய்த
கருப்புடை தரித்த பெரியாரின் மகளே!
ஒரு நூற்றாண்டு வாழ்க!”

- என்று அன்னை சத்தியவாணி முத்து அவர்களைப் பற்றி கவிதை வரியால் வாழ்த்தினார் புலவர் புலமைப்பித்தன் அவர்கள். அந்த வரிகளை நினைவு கூர்ந்து சத்தியவாணி முத்து அவர்களின் இந்த நூற்றாண்டு விழாவில் என்னுடைய உரையினை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெண் சிங்கமாக வாழ்ந்து காட்டியிருக்கும் சத்தியவாணி முத்து அம்மையாரின் நூற்றாண்டு விழாவைக் கழகத்தின் மகளிரணியின் சார்பில் இன்றைக்கு எழுச்சியோடு, ஏற்றத்தோடு நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய நேரத்தில். கழகத்தில் இருக்கும் மகளிருக்காக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் நினைத்தார்கள்.

பாரிமுனை பெத்தநாயக்கன்பேட்டையில் ஒரு பள்ளிக்கூடத்தில் மகளிர் மன்றத்தின் தொடக்கவிழா நடந்தது. அப்போது கழக முன்னணியினரின் மனைவிமார்கள் பலரும் வந்திருந்தார்கள். அனைவரையும் பேசச் சொன்னார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அதில் பலருக்கும் பேசத் தெரியவில்லை. இப்போது இருப்பவர்களை பேசச் சொன்னால் பேசிக் கொண்டே இருப்பார்கள், அது வேறு. அவர்களுக்கு அப்போது பேச்சே வரவில்லை. அண்ணா சொன்னதற்காக மேடைக்கு வந்து 'அனைவருக்கும் வணக்கம்' என்று சொல்லி விட்டு நின்று விட்டார்களாம்.

இந்தச் சமூகத்தால் ஒடுக்கப்பட்டிருந்த மகளிர், தங்களுக்குப் போடப்பட்டிருந்த அடிமை விலங்கை உடைத்து முன்னேற, அப்போதுதான் வெளியே வந்திருந்த காலம் அது. அதனால் பல பெண்களுக்கு பேச்சுக் கலைக் கை கூடவில்லை. பெண்களுக்கு இருந்த இந்தத் தடையைப் போக்க, தனது பேச்சின்போது பேரறிஞர் அண்ணா அவர்கள்,

“நம் இயக்கத்தின் பெண் சிங்கங்களான டாக்டர் தருமாம்பாள், மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அவர்கள், சத்தியவாணி முத்து அவர்கள் ஆகிய மூவரைப் போலப் பேசி கழகம் வலுப்பெறச் செய்ய வேண்டும்" என்று சொன்னார்.

இப்படி தனது பெயர் எடுத்துக்காட்டாய் சொல்லப்படும் அளவிற்குப் பேரறிஞர் அண்ணாவையே பேச்சால் அசத்தியவர்தான் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்கள்.

அவரைப் போன்ற மகளிர் இந்த இயக்கத்துக்குக் கிடைத்ததால்தான் இன்று, பல மகளிர் தங்களது தடைகளை உடைத்து, உரிமைகளுக்காக உரக்க பேசுகிறார்கள்.

விருதுநகர் மாநாட்டில் அவர் அமர்ந்திருந்ததைப் பார்த்த பேரறிஞர் அண்ணா அவர்கள்... 'மதுரை மீனாட்சியைப் போலக் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் சத்தியவாணி முத்து' என்று சொல்லிப் பாராட்டினார்.

இப்போது இந்த அரங்கத்தில் பெரும்பாலும் மகளிர் கூடியிருக்கிறீர்கள். இதைவிடப் பெரிய அரங்கமாக இருந்திருந்தால் இன்னும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வந்திருப்பார்கள்.

மகளிரணி மாநாடாக இருந்திருந்தால் இலட்சக்கணக்கான மகளிர் கூடும் அளவுக்கு இன்றைக்கு நாமும் வளர்ந்திருக்கிறோம். அதை யாரும் மறுத்திட, மறைத்திட முடியாது.

அதுமட்டுமல்ல தமிழ்ச் சமுதாயமும் வளர்ந்திருக்கிறது. ஆனால், அந்தக் காலத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்குத்தான் பெண்கள் அரசியலுக்கு வந்தார்கள். அதுவும் திராவிட இயக்கத்துக்கு வந்தார்கள்.

நாகம்மையார், மலர்முகத்தம்மையார், அன்னை மீனாம்பாள் சிவராஜ், நீலாவதி இராமசுப்பிரமணியம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், டாக்டர் தருமாம்பாள், குஞ்சிதம் குருசாமி, அன்னை மணியம்மையார் என இப்படி விரல் விட்டு எண்ணக் கூடிய பெண்களே அந்தக் காலத்தில் இருந்தார்கள். அதில் இளம் வயதிலேயே இணைந்து கொண்டவர்தான் நம்முடைய அன்னை சத்தியவாணி முத்து அவர்கள்.

இதனைத் தந்தை பெரியார் அவர்களே சொல்லி இருக்கிறார்கள்.

“அந்த நாளில் பெண்களில் வெகு சிலர்தான் நமது இயக்கத்தில் ஈடுபட முன் வந்தனர். மிகவும் விரல் விட்டு எண்ணத்தக்க வகையில் தொண்டாற்றியவர்களில் சத்தியவாணி முத்துவின் பணி என்பது மிகமிகச் சிறப்பானதாகும்" என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.

அதேபோல் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் - சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களுக்குமான நட்பு என்பது கொள்கை நட்பு. இடைப்பட்ட சில காலம் அம்மையார் அவர்கள் நமது இயக்கத்தை விட்டு பிரிந்து இருந்தாலும், சில ஆண்டுகள் கழித்து மீண்டும் கழகத்தில் அம்மையார் அவர்கள் தன்னை இணைத்துக் கொண்டார்கள்.

இறுதிப் பத்தாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தில்தான் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்கள் இயங்கினார்கள்.

அறிவியக்கத்தின் அசைக்க முடியாத வீராங்கனை என்றும், பகுத்தறிவுத் திலகம் என்றும், சுயமரியாதைச் சுடரொளி என்றும், அறப்போர் புரியத் தயங்காத வீராங்கனை என்றும், இயக்கத்தை வளர்த்து வலுவூட்டிய தியாக தீபம் என்றும் அம்மையாரைப் புகழ்ந்து எழுதியவர் தலைவர் கலைஞர் அவர்கள். இப்படியெல்லாம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் புகழ்ந்து எழுதுவதற்குக் காரணம், சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களின் போராட்டக் குணம்!

ஒன்பது முறை சிறை சென்றிருக்கிறார். இரண்டு முறை கர்ப்பவதியாக கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்றிருக்கிறார். இரண்டு முறை கைக்குழந்தையை வைத்துக் கொண்டு கைதாகி இருக்கிறார். இதனால்தான் 100 ஆண்டுகள் கழித்தும் அவரை நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.

புதுச்சேரியில் கலைஞருக்கு ஒரு வரலாறு உண்டு. நாடகம் நடத்தச் சென்ற நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமை, அநீதி, ஒரு கொலைவெறி தாக்குதல். 1945-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் அது. அவர் தாக்கப்பட்டு - இறந்து போனார் என்று நினைத்து சாக்கடையில் தூக்கி வீசப்பட்டது அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

அதில் இருந்துதான் கொள்கைவாதியான தலைவர் கலைஞர் அவர்கள் - போர்வீரனாக மாறினார் என்பது அனைவருக்கும் தெரியும். அதே புதுச்சேரியில் அப்போது சத்தியவாணி முத்து அவர்களும் இருந்தார்கள்.

திராவிடர் கழக மாநாட்டில் அண்ணல் அம்பேத்கர் அவர்களது படத்தைத் திறந்து வைக்க அன்னை சத்தியவாணி முத்து சென்றிருந்தார்கள். மாநாட்டுக்கு முந்தைய நாளே கலவரமும் வன்முறையும் நடத்தப்பட்டதால் மாநாடு திட்டமிட்டபடி நடக்கவில்லை. அம்மையார் பேசுவதற்கு முன்பாக, கையில் கம்போடு வன்முறையாளர்கள் மேடை ஏறினார்கள். கூட்டமே கலைக்கப்பட்டது. அம்மையார் அவர்கள் முத்தியால்பேட்டையில் இருந்த பொன்.இராமலிங்கம் என்பவரது வீட்டுக்குச் செல்லும்போதும் அவரை விடாமல் வழி மறுத்தார்கள். வேறு ஒரு வீட்டுக்குள் நுழைந்து தப்பினார்.

மறுநாள் சென்னை திரும்ப வேண்டும். புதுச்சேரி ரயில் நிலையத்துக்கு போய் ஏறினால், கலவரக்காரர்கள் பார்த்துவிடக்கூடும் என்பதால் அருகில் இருக்கிற வளவனூர் ரயில் நிலையத்துக்கு போய் இரயில் ஏற்றி விட்டுள்ளார்கள். முக்கியமானவர்கள் அனைவரும் புதுச்சேரியில் இருந்து தப்பி விட்டார்கள், இவர் ஒருவர் மட்டும்தான் இங்கு இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு தேடியிருக்கிறது கலவரக் கும்பல். அன்று காலையில் அவர் சிக்கி இருந்தால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கும்.

22 வயதில் சத்தியவாணி முத்து அவர்கள் எதிர்கொண்ட தாக்குதல் இது. வேறொரு பெண்ணாக இருந்தால் இத்தோடு அரசியலே வேண்டாம் என்று போயிருப்பார்.

ஆனால், ஒரு சீர்திருத்த இயக்கத்தில் பெண்கள் ஈடுபடும்போது எதிர்கொள்ள நேரும் ஆபத்துகள் என்ன என்பதை உணர்ந்து, அதன்பிறகு தைரியமாக ஈடுபட்ட காரணத்தால்தான் இன்றைக்கு வரலாற்றில் சத்தியவாணி முத்து அவர்கள் ‘அன்னை’ என்ற அடைமொழியோடு இடம்பெற்றுவிட்டார்.

அரசியலுக்கு வருகின்ற பெண்களுக்கு அன்னை சத்தியவாணி முத்து அவர்கள் ஒரு பாடம். அரசியலுக்குள் நுழைந்த காலத்தில் எத்தகைய ஆர்வத்தோடு வந்தாரோ, அதே ஆர்வத்தோடு இறுதிக் காலம் வரைக்கும் இயங்கினார்.

திராவிடர் கழகத்தில் சொற்பொழிவாளர், திராவிடர் கழக நிர்வாகக் குழு உறுப்பினர், திமுகவின் செயற்குழு உறுப்பினர் - பொதுக்குழு உறுப்பினர், கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர், பத்து ஆண்டு காலம் கழகத்தின் கொள்கை விளக்கச் செயலாளர், பேரறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் அமைச்சர், முத்தமிழறிஞர் கலைஞர் அமைச்சரவையில் அமைச்சர், தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், ஒன்றிய அமைச்சர், கழகத்தின் ஆதிதிராவிடர் உரிமைப் பிரிவுச் செயலாளர்.

1991-ஆம் ஆண்டு வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது அகில இந்திய எஸ்.சி-எஸ்.டி. ஆணையத்தின் தலைவராக சத்தியவாணிமுத்து அவர்களை நியமிக்க தலைவர் கலைஞர் அவர்கள் பரிந்துரை செய்தார்கள்.

பிரதமர் அவர்களும் ஒப்புக்கொண்ட நிலையில் அவரது ஆட்சிக் கலைந்ததால் அம்மையார் அவர்கள் அந்தப் பொறுப்புக்குச் செல்ல இயலாத சூழல் ஏற்பட்டது. அதனை மனதில் வைத்தே, 1991-ஆம் ஆண்டு தந்தை பெரியார் விருதை அம்மையாருக்கு வழங்கி பெருமைப்படுத்தினார்கள்.

அந்த விழாவில் வீர உரை ஆற்றினார் அம்மையார். அப்போதுதான் ஜெயலலிதா முதல்முறையாக ஆட்சிக்கு வந்திருந்தார். முப்பெரும் விழாவைக் கூட சென்னையில் நடத்த விடக்கூடாது என்று கலவரம் ஏற்படுத்தப் பார்த்தார்கள்.

மிகப்பெரிய ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கல்லெறிந்து ஊர்வலத்தைக் கலைக்கப் பார்த்தார்கள். அப்போதும் தைரியமாகக்த் துணிந்து நடந்து வந்தார். மூன்று நான்கு தெருக்கள் மாறிமாறிப் போய் எப்படியோ மேடைக்கு வந்துவிட்டார்.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோர் குறித்து எழுச்சி உரையை அன்றைய நாள் ஆற்றினார்.

அம்மையார் அவர்கள் மறைந்தபோது உடனடியாக அண்ணா நகர் வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தினார் கலைஞர் அவர்கள். அவரோடு நானும் சென்று அம்மையாருக்கு அஞ்சலி செலுத்தினேன்.

மூலக்கொத்தளம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டபோது கலைஞர் அவர்கள் இறுதி ஊர்வலத்தில் நடந்தே வந்து தனது புகழ் அஞ்சலியை செலுத்தினார்கள்.

போராட்டக் குணமும், தியாக உணர்வும், அசைக்கமுடியாத கொள்கைப் பற்றும் கொண்டவராக இறுதிமூச்சு வரையிலும் அன்னை சத்தியவாணிமுத்து அவர்கள் இருந்தார்கள். இதனை இக்கால மகளிர் அணியினரும் பெற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடுதான் இந்த நூற்றாண்டு விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

இத்தனை பதவிகளில் இருந்தார் என்றால், அதற்குக் காரணம், அத்தனை தியாகங்களைச் செய்தார் என்பதால்தான்.

இத்தனை ஆண்டுகள் கழித்தும் போற்றப்படுகிறார் என்றால், அதற்குக் காரணம், அந்தளவுக்கு போராளியாக வாழ்ந்தார் என்பதால்தான்.

இன்றைக்கு அண்ணல் அம்பேத்கர் பெயரால் ஒரு கல்லூரி சென்னையில் இருக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் அம்பேத்கர் அவர்கள் பெயரால் இந்தியாவிலேயே அமைந்த ஒரு கல்லூரி அதுவாகத்தான் இருக்கும்.

அதற்குத் தூண்டுகோலாக இருந்து ஐந்து லட்சம் ரூபாய் நிதியைத் திரட்டிக் கொடுத்தவர் அன்னை சத்தியவாணி முத்து அவர்கள். அம்பேத்கர் பெயரைச் சூட்டியவர் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

இன்றைக்கு அகில இந்திய வானொலி என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம். அதற்கு அந்தக் காலத்தில் ஆகாஷ்வாணி என்று பெயர். ஆகாஷ்வாணி செய்திகள் வாசிப்பது என்றுதான் சொல்வார்கள்.

முதலமைச்சராக பேரறிஞர் அண்ணா அவர்கள் இருக்கிறார். அப்போது செய்தித்துறை அமைச்சராக அன்னை சத்தியவாணி முத்து அவர்கள் இருக்கிறார். ஒன்றிய அமைச்சர் கே.கே.ஷா வந்திருக்கிறார். அவரை மேடையில் வைத்துக் கொண்டே, 'இந்த ஆகாஷ்வாணி என்ற பெயரை எப்போது மாற்றப் போகிறீர்கள்? வானொலி என்று தானே இருக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.

அதன்பிறகுதான் ஆகாஷ்வாணி போய் - வானொலி வந்தது. இதுதான் அவரது போராட்டக் குணத்துக்கு எடுத்துக்காட்டு!

இப்படிப்பட்ட போராட்டக் குணத்தை அனைவரும் பெற வேண்டும்.

ஒரு சத்தியவாணி முத்து அல்ல, ஓராயிரம் சத்தியவாணி முத்துக்கள் நம் கழகத்தில் உருவாக வேண்டும் என்று கேட்டு, அவருடைய நூற்றாண்டு விழாவில் அவர் ஏற்றுக் கொண்டிருந்த இலட்சியம் வாழ, வளர பாடுபடுவோம், பணியாற்றுவோம். அதற்காகத்தான் ‘திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்த திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று அவர் பெயரால் கேட்டு விடைபெறுகிறேன்.

நன்றி ! வணக்கம் !” என உரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x