Published : 18 Feb 2023 03:09 PM
Last Updated : 18 Feb 2023 03:09 PM

“இதுவரை 315 ரூபாய் செலவாகி இருக்கு” - ஈரோடு கிழக்கு சுயேச்சை வேட்பாளர் அதிரடி

ஈரோடு கிழக்கில் போட்டியிடும் சுயேட்சையாக போட்டியிடும் ‘டிஜிட்டல்’ வேட்பாளர் தீபன் சக்கரவர்த்தி.

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அனலடித்துக் கொண்டு இருக்கிறது. திரும்பும் இடமெல்லாம், கூட்டம், கூட்டமாய் வாக்கு சேகரிக்க தொண்டர்படை களமாடி வருகிறது. இதோடு, வாக்காளர்களை கூடாரங்களில் அடைத்து வைக்கிறார்கள், அரசியல் கட்சியினர் கணக்கு பார்க்காமல் கோடிக்கணக்கில் பணத்தை செலவிடுகின்றனர் என்ற தகவல்களும் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. ஈரோடு வாக்காளர்கள் பெறும் இந்த உபசரிப்பு தொடர்பான நக்கல் பதிவுகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

இந்த நிலையில், ஒத்தை ஆளாய் இடைத்தேர்தல் வேட்பாளராய் களமிறங்கி, டிஜிட்டல் பிரச்சாரம் மூலம், ஈரோட்டின் பிரச்சினைகளை பதிவிட்டு வருகிறார் தீபன் சக்கரவர்த்தி எனும் 32 வயது இளைஞர். ஈரோடு கிழக்கு தொகுதியில் மைக் சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் தீபன் சக்கரவர்த்தியோடு பேசினோம்... “எனக்கு சொந்த ஊர் நாமக்கல். சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிருபராக சில ஆண்டுகள் வேலை பார்த்தேன். அந்த பணியை விட்டுவிட்டு, Chennai Vlogger என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்தேன். பயணங்கள் தொடர்பான வீடியோ பதிவுகளை வெளியிட ஆரம்பித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நேரத்தில், கடந்த 2021-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் நாமக்கல் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டேன். தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, மக்களுக்காக உயிரைக் கொடுத்து உழைக்க வேண்டும் என்பதெல்லாம் அப்போது என் இலக்கு இல்லை. வேட்புமனு தாக்கல், தேர்தல் செலவினங்கள், பிரச்சார கட்டுப்பாடுகள், வாக்குப் பதிவு விதிமுறைகள் என தேர்தல் நடைமுறைகள் குறித்த வீடியோ பதிவுகளை எனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடவே, இந்தத் தேர்தலில் போட்டியிட்டேன்.

இதுதான் இடைத்தேர்தல் பணிக்கு தீபன் சக்கரவர்த்தி தயார் செய்த ‘வார் ரூம்’

பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. யாரிடமும் நேரில் சென்று, எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்கவில்லை. டிஜிட்டல் பதிவுகளில் மட்டும் நானும் ஒரு வேட்பாளர் எனக் குறிப்பிட்டேன். இந்தத் தேர்தலில் லாரி சின்னத்தில் போட்டியிட்டு 249 வாக்குகள் பெற்றேன். இப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறேன். மைக் சின்னம் கேட்டேன். மேலும் இரு வேட்பாளர்கள் இந்த சின்னம் கேட்டதால், குலுக்கல் முறையில் மைக் சின்னம் எனக்கு கிடைத்தது. இந்தத் தேர்தலில் நான் போட்டியிட மூன்று காரணங்கள்தான்.

முதலாவது, இளைஞர்கள் மத்தியில் அரசியல் குறித்த பார்வை வர வேண்டும். இரண்டாவது ஒரு வேட்பாளர் தேர்தல் செலவினமாக ரூ 40 லட்சம் வரை செலவிடலாம் என தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது. நடைமுறையில், இதைத்தாண்டி பல கோடிகளை செலவிடுகிறார்கள் என்ற நிலையில், டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் செய்தால், என்னைப் பொறுத்தவரை ரூ.40 லட்சம் என்பதே அதிகம் என நினைக்கிறேன்.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் ஈரோடு மக்களின் அடிப்படை பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினை, தொழில்சார்ந்த பிரச்சினைகளை எனது வலைத்தளத்தில் வெளிப்படுத்துவது எனது மூன்றாவது நோக்கம்” என்று சொல்லி முடித்தார் தீபன் சக்கரவர்த்தி.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில், தீபன் சக்கரவர்த்தியை லட்சக்கணக்கணக்கானவர்கள் பின்தொடர்கிறார்கள். ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பது தொடர்பான பிரச்சினை குறித்து இவர் வெளியிட்ட வீடியோ பதிவை 2 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களும் அடக்கம்.

‘தினமும் காலையில் நாமக்கல்லில் உள்ள என் வீட்டில் இருந்து பஸ்ஸில் ஈரோடு வருவேன். என்னிடம் உள்ள கேமராவைக் கொண்டு, ஈரோடு நகரின் முக்கிய பிரச்சினைகளை பதிவிடுவேன். அதோடு, எனக்கு வாக்களியுங்கள் என்ற வேண்டுகோளை வைத்து எனது வலைத்தளங்களில் பதிவிடுவேன். இதைத் தாண்டு எந்த ஒரு வாக்காளரையும் நான் நேரில் சந்தித்து வாக்கு கேட்க மாட்டேன். எனது இந்த பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் எனக்கு வாக்களிப்பதாகச் சொல்கிறார்கள்’ என்றார் தீபன் சக்கரவர்த்தி.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்யும் போது கட்டுத்தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்தியுள்ளார் தீபன் சக்கரவர்த்தி. இந்த தேர்தலில் மொத்தமாக ரூ.2 ஆயிரம் மட்டும் செலவு செய்ய திட்டமிட்டு இருக்கிறேன் என்று சிரிக்காமல் சொல்கிறார். தனது வீட்டில் வீடியோ பதிவுகளை வலைத்தளத்தில் வெளியிட வசதிகளை செய்துள்ள தீபன் சக்கரவர்த்தி, அதற்கு தேர்தலுக்கான ‘வார் ரூம்’ என்று பெயர் வைத்துள்ளார். தனது நண்பர்கள் உட்பட யாரையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறார் இந்த வித்தியாசமான வேட்பாளர்.

‘வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களே’ என்று கேட்டபோது, ‘வாக்குக்கு பணம் வாங்கி மக்கள் பழகி விட்டனர். அதை தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை. வாக்கிற்கு பணம் பெறக்கூடாது என பெரிய தலைவர்கள் சொல்லியே மக்கள் கேட்கலை. நான் சொன்னால், சிரிச்சிட மாட்டாங்களா’ என்கிறார் தீபன் சக்கரவர்த்தி.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் செலவினங்களை, நான்கு நாட்களுக்கு ஒருமுறை தேர்தல் ஆணையத்தில் சமர்பிப்பது ஒரு நடைமுறை. நமது டிஜிட்டல் வேட்பாளர் தீபன் சக்கரவர்த்தி, நேற்று தனது செலவுக்கணக்கை பில்லுடன் தாக்கல் செய்துள்ளார். மைக் சின்னம் கொண்ட ஸ்டிக்கர் அடிக்க செலவிட்ட ரூ.315 தான் இவரது செலவுக்கணக்கு.

73 சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்கும் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில், இதுபோன்ற சுவாரஸ்யங்களும் இருந்தால்தானே தேர்தல் களம் களை கட்டும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x