Published : 18 Feb 2023 08:42 AM
Last Updated : 18 Feb 2023 08:42 AM

குடியரசுத் தலைவர் வருகை: கோவையில் இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம்

கோவை: குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, கோவையில் இன்றும், நாளையும் (பிப்.18, 19) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு, கோவை அவிநாசி சாலை பழைய மேம்பாலம், கூட்ஷெட் சாலை, புருக்பீல்டு சாலை, சிந்தாமணி சந்திப்பு, கவுலிபிரவுன் சாலை, லாலி சாலை, மருதமலை சாலை ஆகியவற்றில் இன்று மதியம் 1 மணி முதல் இரவு 10 மணி வரையும், நாளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, அவிநாசியிலிருந்து நீலாம்பூர், சின்னியம்பாளையம் வழியாக கனரக, சரக்கு வாகனங்கள் நகருக்குள் வர தடை விதிக்கப்படுகிறது. மாறாக, எல் அன்ட் டி பைபாஸ் சாலை, சிந்தாமணிப்புதூர், ஒண்டிப்புதூர், ராமநாதபுரம் வழியாக நகருக்குள் வரலாம். கோவை நகரிலிருந்து அவிநாசிக்கு செல்லும் கனரக, சரக்கு வாகனங்கள் அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் எல் அன்ட் டி பைபாஸ் சாலை வழியாக செல்லலாம்.

காளப்பட்டி சாலை வழியாக வரும் கனரக, சரக்கு வாகனங்கள் சிட்ரா சந்திப்பை அடைய தடை விதிக்கப்படுகிறது. மாறாக, காளப்பட்டி நால் ரோடு, மயிலம்பட்டி, தொட்டிபாளையம் வழியாக செல்லலாம். சத்தி சாலை, சரவணம்பட்டி பகுதிகளிலிருந்து அவிநாசி சாலை, திருச்சி சாலைக்கு செல்லும் கனரக, சரக்கு வாகனங்கள் கணபதி, காந்திபுரம் மேம்பாலம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் வழியாக செல்லலாம்.

மருதமலை சாலை, தடாகம் சாலை வழியாக வரும் வாகனங்கள் கவுலிபிரவுன் சாலை, சிந்தாமணி வழியாக செல்வது தடை செய்யப்படுகிறது. அதற்கு மாற்றாக, ஜிசிடி, பாரதிபார்க் சாலை, வடகோவை மேம்பாலம், காந்திபுரம் அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் வழியாக செல்லலாம். மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் வடகோவை மேம்பாலம், காந்திபுரம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் வழியாக செல்லலாம்.

பொதுமக்கள் அவிநாசி சாலை, பழைய மேம்பாலம், கூட்ஷெட் சாலை, புருக்பீல்டு சாலை, சிந்தாமணி சந்திப்பு, கவுலிபிரவுன் சாலை, லாலி சாலை, மருதமலை சாலை ஆகிய பகுதிகளில் மேற்குறிப்பிட்ட நேரங்களில் செல்ல வேண்டியிருந்தால், தங்கள் பயணத்தை மாற்றி திட்டமிட்டுக் கொள்ளவும். அவிநாசி சாலை, சின்னியம்பாளையம் வழியாக, கோவை நகருக்குள் வரும் கார், இதர வாகனங்கள், தொட்டிபாளையம் பிரிவு, மயிலம்பட்டி, காளப்பட்டி நால்ரோடு, சரவணம்பட்டி வழியாக செல்லலாம். விமான நிலையம், ரயில் நிலையம், மருத்துவமனைகளுக்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே தொட்டிபாளையம் பிரிவிலிருந்து நகருக்குள் அனுமதிக்கப்படும்.

அவிநாசி சாலை, பழைய மேம்பாலத்தை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் மேற்குறிப்பிட்ட நேரங்களில், மேம்பாலத்தின் கீழே செல்லலாம். மருதமலை சாலை, தடாகம் சாலை வழியாக வரும் வாகனங்கள் ஜிசிடி, பாரதிபார்க் சாலை, வடகோவை மேம்பாலம், காந்திபுரம் வழியாக செல்லலாம். மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் வடகோவை மேம்பாலம், காந்திபுரம் வழியாக செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x