Published : 31 May 2017 12:00 PM
Last Updated : 31 May 2017 12:00 PM

மாட்டு இறைச்சித் தடைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: சென்னை ஐஐடியை முற்றுகையிட்ட புரட்சிகர மாணவ அமைப்பினர் கைது

சென்னை ஐஐடியில் மாட்டு இறைச்சித் திருவிழா நடத்திய சூரஜ் என்ற மாணவர் தாக்கப்பட்டத்தைக் கண்டித்து புரட்சிகர மாணவ அமைப்பினர் ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

மிருக வதை தடைச் சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.

சென்னை ஐஐடியில் முற்போக்கு மாணவர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்த சில மாணவர்கள் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டத்தை நடத்தினர்.

மாட்டு இறைச்சித் திருவிழா நடத்திய சூரஜ் என்ற மாணவர் மீது வேறு சில மாணவர்கள் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த சூரஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) புரட்சிகர மாணவ அமைப்பினர் மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்து ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மாணவர் சூரஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாட்டு இறைச்சி உண்பது எங்களது உரிமை அதில் மத்திய அரசு தலையிடக் கூடாது போன்ற கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர்.

மாணவர்களின் போராட்டம் காரணமாக ஐஐடி அமைந்துள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, போலீஸார் மாணவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். போலீஸாரின் கோரிக்கையை ஏற்க மறுத்த மாணவர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். எனினும் பெண்கள் தங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்கள் போராட்டம் காரணமாக ஐஐடி வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தை தோல்வி

சென்னை ஐஐடி டீன் உடன் மாணவ அமைப்பைச் சேர்ந்த இரு மாணவர்கள் மாணவர் சூரஜ் தாக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரது மருத்துவ செலவை ஐஐடி நிர்வாகமே ஏற்று கொள்ள வேண்டும் என பேசுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஐஐடி நிர்வாகம் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x