Last Updated : 17 Feb, 2023 06:49 PM

 

Published : 17 Feb 2023 06:49 PM
Last Updated : 17 Feb 2023 06:49 PM

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை: வரலாறு காணாத பாதுகாப்பு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகையொட்டி, மதுரையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலக பிரசித்த பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாளை (பிப்.18) தரிசனம் செய்கிறார். இதையொட்டி மதுரையில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. கோவை ஈசா யோகா மையத்தில் இன்று நடக்கும் சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்கிறார். இதற்கு முன்னதாக அவர் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார்.

இதற்காக, அவர் தனி விமான மூலம் டெல்லியில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, மதுரை விமான நிலையத்திற்கு 11.40 மணிக்கு வருகிறார். அவரை தமிழக ஆளுநர் ஆர்என். ரவி வரவேற்கிறார். 11.50-க்கு விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படுகிறார். பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம், தெற்குவாசல், கீழவாசல் சந்திப்பு, விளக்குத்தூண், வெங்கலக்கடை தெரு வழியாக கிழக்கு சித்திரை வீதிக்கு மதியம் 12.5 மணிக்கு வந்தடைகிறார். 12.15 மணிக்கு அம்மன் சன்னதி பகுதியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதைத் தொடர்ந்து, கோயிலுக்குள் செல்கிறார். அம்மன், சுவாமி சன்னதிகளுக்கு சென்று வழிபடுகிறார். இதன்பின், 12.45 மணிக்கு மேல் அங்கிருந்து புறப்படுகிறார். கார் மூலம் வெங்கலக்கடை தெரு சந்திப்பு, யானைக்கல், கோரிப்பாளையம் வழியாக அழகர்கோயில் சாலையிலுள்ள அரசு சுற்றுலா மாளிகையை சென்றடைகிறார். அங்கு மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்பின், மீண்டும் விமான நிலையத்திற்கு புறப்படுகிறார். கோரிப்பாளையம், கீழவாசல், தெற்குவாசல், வில்லாபுரம், பெருங்குடி வழியாக விமான நிலையம் சென்றடைகிறார். 2.10 மணிக்கு தனி விமானம் மூலம் கோவைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி விமான நிலையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதி, காரில் அவர் செல்லும் வழித்தட பகுதிகள் என, சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர்களில் இருந்தும் காவல்துறை அதிகாரிகள், பட்டாலியன் போலீஸார் வரழைக்கப்பட்டுள்ளனர். கோயிலை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிழக்கு சித்திரை வீதி வழியாக அவர் அம்மன் சன்னதிக்குள் நுழையும் பகுதியில் துப்பாக்கி ஏந்தி போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கோயிலை சுற்றிலும் பிளாட்பாரம் உள்ளிட்ட கடைகளை இன்று ஒருநாள் மட்டும் அடைக்க அறிவுறுத்தி உள்ளனர்.

விமான நிலையம்- மீனாட்சி அம்மன் கோயில் - அரசு சுற்றுலா மாளிகை வரை அவர் செல்லும் சாலைகளில் பிளாட் பாரங்களில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் இன்று பணியிலுள்ள காவல்துறை, பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சித்திரை வீதிகள் உட்பட கோவில் வளாகம் முழுவதும் பளீச் என, காட்சி அளிக்கிறது. இது போன்ற பல்வேறு நிலையில், மதுரையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் உட்பட சுமார் 25-க்கும் மேற்பட்ட காவல்துறை கார்கள் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு அணி வகுத்தன. பெருங்குடி, வில்லாபுரம், தெற்கு வாசல், கீழவாசல், விளக்குத்தூண், வெங்கலக் கடை தெரு வழியாக கிழக்கு சித்திரை வீதியிலுள்ள அம்மன் சன்னதி நுழைவு வாயிலை வந்தடைந்தன.

அங்கிருந்து குடியரசு தலைவரை கோயிலுக்குள் பாதுகாப்புடன் அழைத்துச் செல்வது உள்ளிட்ட ஒத்திகை பார்க்கப்பட்டது. மீண்டும் அந்த வாகனங்கள் அரசு சுற்றுலா மாளிகை சென்றடைந்து, விமான நிலையத்திற்கு அவர் போகும் வழித்தடங்கள் வழியாக மீண்டும் விமான நிலையத்தை அடைந்தது. இந்த ஒத்திகை நிகழ்வில், சென்னை சிறப்பு பாதுகாப்பு பிரிவு டிஐஜி மகேஷ்குமார் தலைமையில், மதுரை துணை ஆணையர்கள் சாய் பிரனீத், அரவிந்த் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

நகரில் 10 இடங்களில் வாகனங்கள் நிறுத்த தடை: மதுரை விமான நிலையம் முதல் தெற்குவாசல் சந்திப்பு வரை, தெற்கு வெளிவீதி முழுவதும், தெற்கு வாசல் சந்திப்பு முதல் கீழவாசல் சந்திப்பு வரை, கீழ வெளிவீதி முழுவதும், காமராசர் சாலை விளக்குத்தூண் முதல் கீழவாசல் சந்திப்பு வரை, மீனாட்சி அம்மன் கோயில் தெரு, வெண்கலக்கடை தெரு, தெற்கு ஆவணி மூல வீதி, பழைய காவல் ஆணையர் அலுவலத்தில் இருந்து ஜடாமுனிகோவில் சந்திப்பு, கீழமாசிவீதி, மொட்டை பிள்ளையார் கோயில் முதல் விளக்குத்தூண் வரை, அழகர் கோயில் சாலை இருபுறமும் கோரிப்பாளையம் முதல் தாமரைதொட்டி வரை முதல் வாகனங்கள் நிறுத்த தடை விதித்து போக்குவரத்து போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x