Published : 17 Feb 2023 03:17 PM
Last Updated : 17 Feb 2023 03:17 PM

“அதானியின் அசுர வளர்ச்சிக்கு மோடி அரசுதான் காரணம் என்பதை மறுக்க முடியுமா?” - காங். மூத்த தலைவர் உத்தம் குமார் ரெட்டி

சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் உத்தம் குமார் ரெட்டி

சென்னை: "மோடி பிரதமராக பதவியேற்ற 2014-ஆம் ஆண்டில் உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 609-வது இடத்தில் இருந்த கவுதம் அதானி, 2022-ல் இரண்டாவது இடத்திற்கு வந்த அதிசயத்தை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய அசுர வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் ஆதரவுதான் காரணம் என்பதை எவராவது மறுக்க முடியுமா?" என்று தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் உத்தம் குமார் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை சத்யமூர்த்தி பவனில், தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் உத்தம் குமார் ரெட்டி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பல ஆண்டுகளாக அமலாக்கப் பிரிவு, சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் போன்ற ஏஜென்சிகளைத் தவறாகப் பயன்படுத்தி, தனது அரசியல் அல்லது கருத்தியல் எதிரிகளை மிரட்டவும், தனது நிதி நலன்களுக்கு இணங்காத வணிக நிறுவனங்களைத் தண்டிக்கவும் பிரதமர் மோடி பயன்படுத்தியுள்ளார்.

1992-ஆம் ஆண்டில், ஹர்ஷத் மேத்தா வழக்கை விசாரிக்க ஒரு நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது, 2001-ஆம் ஆண்டில் கேதன் பரேக் வழக்கை நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரித்தது. அன்றைய பிரதமர்கள் நரசிம்ம ராவ் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகிய இருவரும் கோடிக்கணக்கான இந்திய முதலீட்டாளர்களைப் பாதித்த ஊழல்களை விசாரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். பிரதமர் மோடிக்கு என்ன பயம்? அவருக்கு கீழ் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடக்கும் என்ற நம்பிக்கை இல்லையா?

இந்த மோசடி நடந்து கொண்டிருக்கும்போது செபி என்ன செய்து கொண்டிருந்தது? இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியானதைத் தொடர்ந்து பங்கு விலைகளில் ஏற்பட்ட சரிவு, செயற்கையாக உயர்த்தப்பட்ட விலைகளால் ஏமாற்றப்பட்டு, அதானி குழுமப் பங்குகளில் முதலீடு செய்த லட்சக்கணக்கான சில்லறை முதலீட்டாளர்களை நிதி ரீதியாகப் பாதிப்படையச் செய்துள்ளது.

2023 ஜனவரி 24 முதல் பிப்ரவரி 15 வரை அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு ரூ.10,50,000 கோடி சரிந்தது. ஜூலை 19, 2021 அன்று, செபியின் விதிமுறைகளை மீறியதற்காக அதானி குழுமம் விசாரணையில் உள்ளதாக நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டது. அதானி குழுமத்தில் எல்ஐசி வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 30 டிசம்பர் 2022 அன்று ரூ.83,000 கோடியிலிருந்து ரூ. 39,000 கோடியாகக் குறைந்தது.

பங்குகளின் விலை வீழ்ச்சி மற்றும் குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், 30 ஜனவரி 2023 அன்று அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்யும்படி எல்ஐசியை மோடி அரசாங்கம் நிர்ப்பந்தித்தது. கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற பேசிய பிரதமர் மோடிக்குப் பிடித்த அதானி வணிகக் குழுமம் வெளிநாட்டுப் போலி நிறுவனங்கள் மூலம் பங்கு விலைகளைக் கையாண்டதாகக் கூறப்படுகிறது. அதானி குழுமத்தின் பங்குகளில் 4.5 பில்லியன் டாலர்கள் (ரூ. 37,000 கோடி ) மான்டெரோசா குழுமத்திடம் உள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத், அதானியின் மகளைத் திருமணம் செய்து கொண்டவர். தப்பியோடிய வைர வியாபாரிக்கும் இதில் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது. மோடி பிரதமராக பதவியேற்ற 2014-ஆம் ஆண்டில் உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 609-வது இடத்தில் இருந்த கவுதம் அதானி, 2022-ல் இரண்டாவது இடத்திற்கு வந்த அதிசயத்தை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய அசுர வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் ஆதரவு தான் காரணம் என்பதை எவராவது மறுக்க முடியுமா?

மோடி அரசு கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிஏஜி, சிபிஐ போன்ற அனைத்து அரசு நிறுவனங்களின் கைகளையும் கட்டிப் போட்டிருக்கலாம். ஆனால், உண்மை வெளிப்பட்டே தீரும் என்பதையே அதானியின் வீழ்ச்சி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனை, அமலாக்கத் துறையோ, சிபிஐ அமைப்போ முயன்றாலும் மறைக்க முடியாது. இது ஆரம்பம் தான். பாஜகவின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறப்போவதை யாராலும் தடுக்க முடியாது" என்று அவர் கூறினார். இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x