Published : 17 Feb 2023 04:45 AM
Last Updated : 17 Feb 2023 04:45 AM

ரூ.50 கோடியில் 25 நகரங்களில் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கிறது

சென்னை: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ரூ.50 கோடி செலவில் தமிழகத்தில் 25 நகரங்களில் புதிதாக காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

மக்கள்தொகை பெருக்கம், அதன் விளைவாக வாகன பெருக்கம், கட்டுமானப் பணிகள் அதிகரிப்பு, பசுமை பரப்பு குறைதல் போன்ற காரணங்களால் நகர்ப்புறங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இது மெல்ல மக்களின் ஆயுளை குறைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தமிழகத்தில் மக்கள் தொகை மற்றும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரங்களில் தற் போது 34 காற்று தர கண்காணிப்பு நிலையங்களை அமைத்து கண்காணித்து வருகிறது. இது 24 மணி நேரமும் செயல்பட்டு, உடனுக்குடன் தரவுகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பி வருகின்றன. நிகழ்நேர மாசு நிலவரத்தை பொதுமக்கள் பார்க்கும் வசதிகளையும் மாசுக்கட்டுபாட்டு வாரியம் கொண்டு வந்துள்ளது.

பொதுமக்கள் அறிந்துகொள்ள..

தற்போது புதிய மாவட்டங் களையும், மாநகராட்சிகளையும் அரசு உருவாக்கியுள்ளது. இப்பகுதிகளிலும், விடுபட்ட மாவட்ட தலைநகரங்களிலும் காற்றின் தரத்தை கண்காணிக்க ரூ.50 கோடியில் 25 நகரங்களில் 24 மணி நேரமும் இயங்கும் நவீன காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களை அமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. அந்த நிலையங்கள் புதிய மாநகராட்சிகளான காஞ்சிபுரம், ஆவடி,தாம்பரம், கும்பகோணம், விடுபட்ட மாவட்ட தலை நகரங்களான தருமபுரி, நாகர்கோவில், பெரம்பலூர், சிவகங்கை, தேனி, திருவாரூர் திருவண்ணாமலை, விழுப்புரம், ஈரோடு, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, புதிய மாவட்டதலைநகரங்களான கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தென்காசி, திருப்பத்தூர், செங்கல்பட்டு மேலும் பல்லாவரம், காரைக்குடி, ராஜபாளையம், ஆம்பூர், நெய்வேலி ஆகிய 25 நகரங்களில் அமைக்கப்பட உள்ளன.

இவற்றின் நிகழ் நேர தகவுகளையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வசதிகளையும் ஏற்படுத்த இருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x