Last Updated : 05 May, 2017 03:19 PM

 

Published : 05 May 2017 03:19 PM
Last Updated : 05 May 2017 03:19 PM

பாஜக கூட்டணி ஏன் தேவை?- சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் விளக்கம்

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சூலூர் எம்எல்ஏ கனகராஜ் நேற்று (வியாழக்கிழமை) கூறியிருந்தார். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு சொன்னதாக விளக்கமளித்திருந்தாலும் அப்படி ஓர் இணக்கத்துக்கு என்ன அவசியம் என்று 'தி இந்து' ஆன்லைனுக்காக அவரிடம் கேட்டபோது பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவருடனான பேட்டியில் இருந்து..

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பே இன்னும் உறுதியாக நிலையில் பாஜகவுடனான கூட்டணி பற்றி பேசியது ஏன்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோன்ற நிலையே உருவாகியிருக்காது. அவர் மத்திய அரசை எதிர்கொள்வதில் வல்லவர். திறமையாக செயல்பட்டு மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டுவார். இப்போது, ஜெயலலிதாவைப் போல் மத்திய அரசை எதிர்கொள்ளவும் எதிர்த்து துணிச்சலாக கேள்வி கேட்கவும் ஆள் இல்லை. அப்படியிருக்கும் சூழலில் மத்திய அரசுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே மாநில நலனுக்கான திட்டங்களைப் பெற முடியும். அதுமட்டுமல்லாமல் மத்திய - மாநில அரசுகள் இணக்கமாக செயல்பட வேண்டும் என்பது எம்.ஜி.ஆர். வகுத்துத் தந்த கொள்கையே. இது எனது தனிப்பட்ட கருத்து. நானும் அதிமுகவின் அடிப்படை தொண்டன் என்ற முறையிலேயே இந்த விருப்பத்தை முன்வைத்தேன். இது நிறைவேறலாம் நிறைவேறாமலும் போகலாம்.

இரு அணிகளும் இணைவதில் யார்தான் முட்டுக்கட்டை போடுகிறார்கள்?

ஓபிஎஸ் - எடப்பாடி இருவருமே பேச்சுவார்த்தைக்குத் தயாராகத்தான் இருக்கிறார்கள். இடையில் இருக்கும் சிலர்தான் இரு அணிகள் இணைந்தபின் நமக்கு என்ன பதவி கிடைக்கும் ஆதாயம் கிடைக்கும் என்ற போட்டியில் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

சரி, இணைப்பு நடந்தால் ஓபிஎஸ் - எடப்பாடி யாரை முதல்வராக ஆதரிப்பீர்கள்?

இருவரும் இரண்டு கண்கள். இருவருமே எனக்கு முக்கியம். இருவரும் திறமையானவர்கள். கட்சியை வலுவானதாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் இரு அணிகளின் இணைப்பு அவசியம். அம்மா மறைவுக்குப் பின் அதிமுகவில் குளறுபடிகள் இருக்கிறது. இதனால் தொண்டர்கள் மத்தியில் அவநம்பிக்கை நிலவுகிறது. இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால் அதிமுக ஒன்றிணைய வேண்டும்.

உண்ணாவிரதம், விவசாயி குடும்பத்துக்கு உதவி.. இதெல்லாம் விளம்பரத்துக்காக என்ற விமர்சனம் குறித்து..

ஒரு குடும்பத்தில் கணவன் தவறு செய்தால் மனைவி தட்டிக்கேட்டால்தான் குடும்பம் சிறப்பாக இருக்கும். அந்த இடத்தில் டாஸ்மாக் கடை இருப்பது தேவையற்றது. மக்களுக்கு அது இடையூறை ஏற்படுத்தும். மக்கள் நலனே பிரதானம். அதனால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டேன். விவசாயி மரணம் என்னை உலுக்கியது. அவரது குடும்பத்தை நேரில் சந்தித்தேன். உண்மை நிலையை கண்டறிந்த பின்னரே எனது ஊதியத்தை அக்குடும்பத்துக்கு உதவித்தொகையாக வழங்கினேன். என்னை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு மற்ற எம்.எல்.ஏ.க்களும் நேரில் சென்று ஆய்வு செய்து தகுந்த விவசாயக் குடும்பத்துக்கு உதவ வேண்டும். அதைவிடுத்து விமர்சனம் செய்வதில் எந்தப் பலனும் இல்லை. எல்லோருக்கும் விளம்பரம் தேவைப்படுகிறது. என்னைப் போன்று பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு அதிகமாகவே தேவைப்படுகிறது. மக்கள் பிரச்சினைகளுக்காக நான் குரல் கொடுப்பதால் அடையாளம் கிடைக்கிறது. நல்லதை செய்தே அடையாளப்படுகிறேனே தவிர தவறான காரணத்துகாக நான் பேசுபொருளாக இல்லையே.

விவசாயிகள் சொந்தக் காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டதாக தமிழக அரசு கூறியிருக்கிறதே..

எல்லா விவசாயிகளும் சொந்தக் காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டதாக தமிழக அரசு சொல்லவில்லை. இங்குள்ள எதிர்க்கட்சிகளும் விவசாய சங்கங்களும் சில உண்மைகளை திரித்துச் சொல்கின்றன. விவசாய நிலம் வைத்திருக்கும் அனைவரது மரணத்தையும் தற்கொலை எனக் கூறுகின்றனர். அப்படி கணக்கிட்டு இழப்பீடு கொடுக்க முடியுமா?

இவ்வாறு எம்.எல்.ஏ. கனகராஜ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x