Last Updated : 16 Feb, 2023 03:31 PM

 

Published : 16 Feb 2023 03:31 PM
Last Updated : 16 Feb 2023 03:31 PM

புதுச்சேரியில் ரூ.1,000 நிதியுதவி திட்டத்தில் பயன்பெற 70,000 குடும்பத் தலைவிகள் தகுதி: ரங்கசாமி தகவல்

புதுச்சேரி: ரூ.1,000 நிதியுதவி திட்டத்திற்காக புதுச்சேரியில் மொத்தமாக 70 ஆயிரம் குடும்பத் தலைவிகள் கணக்கு எடுக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி - விழுப்புரம் சாலையை இணைக்கும் முக்கிய பகுதியாக ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றுப் பாலம் திகழ்கிறது. இந்தப் பாலத்தில் 24 மணி நேரமும் பேருந்துகள், லாரிகள், சரக்கு வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் மிகுந்த சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது மேம்பாலத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மேம்பாலம் குறுகியதாக இருப்பதாலும், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாவதாலும் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. மேலும், எம்.என்.குப்பம் முதல் இந்திரா காந்தி சிலை சதுக்கம் வரையில் சாலை அகலப்படுத்தப்படவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மத்திய சாலை மற்றும் தரைவழி போக்குவரத்து அமைச்சகம் இதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், புதுச்சேரி அரசு பொதுப் பணித்துறை சார்பில் ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.60 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம், சாலைகள் மற்றும் பக்கவாட்டு வாய்க்கால்கள் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது மேம்பாலத்தின் மேல் தளத்தினை தூண்களில் நிறுவும் பணியை முதல்வர் தொடங்கி வைத்தார். பின்னர் முதல்வர் ரங்கசாமி கூறியது: “புதுச்சேரியில் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று கூட பொதுப்பணித் துறை அமைச்சர் ஆய்வு செய்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் 280 கி.மீ சுற்றளவுக்கு சாலைகள் உள்ளன. இவற்றில் 140 கி.மீ வரையிலான சாலைகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள சாலைகள் இரண்டு, மூன்று மாதங்களில் போட்டு முடிக்கப்படும். இதேபோன்று உட்புற சாலைகளை மேம்படுத்த சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி கொடுத்துள்ளோம். இன்னும் ரூ.38 கோடி கொடுக்க இருக்கிறோம். அந்த நிதியில் உட்புற சாலைகளை மேம்படுத்த உள்ளோம்.

அதுமட்டுமின்றி கிராமங்களை இணைக்கின்ற சாலை பணிக்கான நிதியும் கொடுக்க இருக்கிறோம். அந்தப் பணிகளையும் விரைவில் தொடங்க இருக்கிறோம். நகர்புறங்களில் மேம்பாலம் அமைப்பதற்கான திட்டங்கள் குறித்து கேட்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அனுமதி வரும். ஆதலால் கூடிய விரைவில் புதுச்சேரியில் சாலைகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு சிறப்பாக இருக்கும். புதுச்சேரி மாநில வளர்ச்சியில் அக்கறை கொண்டது இந்த அரசு. புதுச்சேரியில் உள்ள உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும், மக்களுடைய நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

விரைவில் மாணவர்களுக்கான சைக்கிள், லேப்டாப் கொடுக்க இருக்கின்றோம். மாணவர்களுக்கு நிதியுதவி அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றது. முதியோர் உதவித்தொகையையும் சரியாக கொடுத்து வருகிறோம்.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 நிதியுதவி திட்டத்தில் முதல்கட்டமாக 13 ஆயிரம் பேருக்கு கொடுத்துள்ளோம். அடுத்ததாக, 25 ஆயிரம் பேருக்கு விரைவில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த இருக்கிறோம். புதுச்சேரியில் மொத்தமாக 70 ஆயிரம் குடும்பத் தலைவிகள் கணக்கு எடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி அனைவருக்கும் நிதியுதவி கிடைக்கும். அதில் எந்தவித ஐயமும் இல்லை.

நாங்கள் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம். நிதி முழுவதுமாக செலவிடுவோம். இது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. எங்களது அரசு மத்திய அரசின் உதவியோடு எல்லா திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தேவையான நிதியுதவி அளிக்கப்படும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x