Published : 03 May 2017 10:16 AM
Last Updated : 03 May 2017 10:16 AM

புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாத 4,300 பேரிடம் அபராதம்: போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை

புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாத 4,300 பேரிடம் அபராதம் வசூலித்துள்ளதாக போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர். 2 வது நாளான நேற்று கெடுபிடிகள் ஓரளவு தளர்ந்திருந்தாலும், ஹெல்மெட் அணியாமல் வந்த போலீஸாரிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது.

புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவது மே 1-ம் தேதி முதல் கட்டாமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வந்த அனைவர் மீதும் முதல் நாளில் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டன. நேற்று கெடுபிடிகள் அதிகளவில் இல்லை. எனினும் ஹெல்மெட் அணியாவிட்டால் கண்டிப்பாக அபராதம் விதிப்போம் என்று போக்குவரத்துத்துறை போலீஸார் தெரிவித்தனர்.

ஹெல்மெட் கடைகளில் நேற்றும் கூட்டம் அலைமோதியது. அதேநேரத்தில் தேவையில்லாமல் டூவீலர் ஓட்டுவோர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்திருந்தது. வாகனம் ஓட்டுவோர் அதிகளவில் ஹெல்மெட் அணிந்து செல்வதை காணமுடிந்தது.

முக்கிய சாலைகளில் போலீஸார் திடீர் சோதனைகளில் ஈடுபட்டு, ஹெல்மெட் போடாதவர்களிடம் அபராதம் வசூலித்தனர்.

இதனையடுத்து நேற்று 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்தபடி வாகனங்களை ஓட்டி வந்தனர். ஹெல்மெட் அணியாத சிலர் முக்கிய இடங்களில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்ததை கண்டதும் வேறு வழியாக சென்றனர். ஒரு சிலர் ஹெல்மெட்டை தலையில் போடாமல் வாகனத்தின் முன்னால் வைத்து எடுத்து வந்தனர். அவர்களை போலீஸார் எச்சரித்து தலைக் கவசத்தை அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதனிடையே போக்குவரத்து காவல் துறையினர் யாருக்கும் பாரபட்சம் காட்ட மாட்டார்கள் என அறிவித்திருந்தனர். அதற்கேற்ப நேற்று தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் தலைக்கவசம் அணியாமல் வந்ததற்கு அவருக்கு ஸ்பாட் பைன் வசூலிக்கப்பட்டது. இதேபோல் புதுவை ரிசர்வ் படை காவலர் ஒருவரும், புதுவை காவலர் ஒருவரும் தலைக்கவசம் அணியாததால் போக்குவரத்து போலீஸாரிடம் அபராதம் கட்டிச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x